சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், களமாடிய 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் முடிவடைந்த நிலையில், ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன.
சர்ச்சை
இந்நிலையில், நேற்று துபாயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவை விமர்சிக்கும் விதமாக இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரது கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, இந்திய கேப்டன் ரோகித்தை விமர்சித்தைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) காங்கிரஸை கடுமையாக தாக்கியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில், "விளையாட்டு வீரராக பார்த்தால் ரோகித் சர்மா அதிக உடல் எடை கொண்டவராக இருக்கிறார். அவர் தனது எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக, இந்தியா இதுவரை கண்டதிலேயே மிகவும் ஈர்க்கப்படாத கேப்டன் அவர்" என்று பதிவிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், இதனைக் கண்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யத் தொடங்கினர். இதனையடுத்து ஷாமா முகமது தனது பதிவை உடனடியாக நீக்கினார். இருப்பினும், பா.ஜ.க ஷாமா முகமதுவின் பதிவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
விளக்கம்
இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமதுவின் கருத்து அக்கட்சியின் கருத்து அல்ல என்றும், அவரது கருத்து கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் விளம்பரத் துறையின் தலைவரான பவன் கேரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர் டாக்டர். ஷாமா முகமது, கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்காத கிரிக்கெட் ஜாம்பவான் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். அந்தப் பதிவை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு அவர் கேட்கப்பட்டுள்ளார், மேலும் எதிர்காலத்தில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருக்கிறது மற்றும் அவர்களின் பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த அறிக்கையையும் அங்கீகரிக்கவில்லை" என்றும் அவர் கூறினார்.