T20 World Cup 2024 | India Vs Pakistan | Rohit Sharma: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அரங்கேறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 120 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியா பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கண் கலங்கிய பாக்., வீரர் - ஆறுதல் சொன்ன கேப்டன் ரோகித்
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட இமாத் வாசிம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டுக்குப் பின் நசீம் ஷா களத்துக்கு வந்தார். பாகிஸ்தான் அடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கவே, அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த நசீம் ஷா அடுத்த இரண்டு பந்துகளில் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார். கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படவே, அவர் ஒரு ரன் மட்டும் எடுத்தார். இதனால், பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, தனது அணியை வெற்றி அழைத்துச் செல்ல முடியவில்லை என்கிற சோகத்தில் நசீம் ஷா கண்ணீர் விட்டு அழுதார். அப்போது நசீம் ஷாவின் கடைசி ஓவர் பேட்டிங்கை பாராட்டும் விதமாக ரோகித் சர்மா அவரை தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லி விட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகிறது. கேப்டன் ரோகித்தின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“