ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் 2-வது போட்டியில் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ள இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் ஆட களம் புகுந்த தன்சித் ஹசன் - சௌம்யா சர்க்கார் ஜோடியில், முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சௌம்யா சர்க்கார் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஹர்ஷித் ராணா வீசிய 1.4-வது ஓவரில் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு வந்த மெஹிதி ஹசன் மிராஸ் உடன் களத்தில் இருந்த தன்சித் ஹசன் ஜோடி அமைத்தார். இதில் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 5 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் மிராஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் தாக்குப் பிடித்து 4 பவுண்டரிகளை விரட்டி இருந்த தொடக்க வீரர் தன்சித் ஹசன் அக்சர் படேல் வீசிய 8.2-வது ஓவரில் கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவருக்குப் பின் வந்த முஷ்பிகுர் ரஹீம் அக்சர் படேல் வீசிய அடுத்த பந்தில் கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்தால் அக்சர் படேல் ஹாட்ரிக் விக்கெட் பெறலாம் என்கிற சூழல் நிலவியது. அப்போது, களத்தில் இருந்த தவ்ஹித் ஹ்ரிடோய் உடன் ஜாக்கர் அலி ஜோடி அமைத்தார்.
கேட்சை விட்ட ரோகித்
இதில், ஜாக்கர் அலி அக்சர் வீசிய 8.4-வது பந்தை எதிர்கொண்டார். பந்தை தடுத்து ஆட அவர் முயன்ற நிலையில், பந்து அவுட்-சைடு எட்ஜ் ஆகி கீப்பருக்கு அருகில் முதல் ஸ்லிப் திசையில் கேப்டன் ரோகித்தை நோக்கி பறந்து வந்தது. ஏறக்குறைய ரோகித்தின் கைக்குப் பந்து வந்த நிலையில், அவர் பந்தைப் பிடிக்க தடுமாறி கேட்சை கோட்டை விட்டார். இதன் காரணமாக அக்சர் படேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது.
கேட்சை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் ரோகித் தனது வலது கையால் தரையைப் போட்டு நான்கைந்து முறை தட்டினார். மேலும், கேட்சை தவற விட்டதற்கு அக்சர் படேலிடம் மன்னிப்பு கோரினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது களத்தில் தவ்ஹித் ஹ்ரிடோய் - ஜாக்கர் அலி ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். வங்கதேச அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/0815cbc8-c49.jpg)