Rohit Sharma | Dinesh Karthik | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (வியாழக்கிழமை) மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாப் டு பிளெசிஸ் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 53 ரன்களும், ரஜத் படிதார் 50 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, 197 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் (69 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (52 ரன்கள்), ரோகித் சர்மா (38 ரன்கள்) சிறப்பாக செயல்படவே, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது. பும்ரா ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார்.
தினேஷ் கார்த்திக்கை கலாய்த்த ரோகித்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக்கை டி20 உலக கோப்பை தேர்வு குறித்து ரோகித் சர்மா ஜாலியாக கலாய்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 53 ரன்கள் எடுத்தார்.
"சபாஷ் டி.கே. டி20 உலகக் கோப்பையில் இடம்பிடிக்க அவர் தீவிரம் காட்டி வருகிறார். உலகக் கோப்பையைப் பற்றிய சிந்தனையில் அவரது மனம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று தினேஷ் கார்த்திக்கிடம் கூறி ரோகித் ஜாலியாக கல்யத்தார். அவர் அவ்வாறு பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது. தற்போது இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 9 ஆம் தேதி அன்று நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“