India vs South Africa | Rohit Sharma | Ravichandran Ashwin: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியது. 'பாக்சிங் டே' போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சுவதாக அறிவித்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனா இந்தியா 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 408 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. அந்த அணியில் அதிகபட்சமாக டீன் எல்கர் 185 ரன்களும், மார்கோ ஜான்சன் 84 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டை கைப்பற்றினார். தற்போது இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
தவறை திருத்திக் கொண்ட ரோகித்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கொண்ட பந்துவீச்சு வரிசையைக் கொண்டு களமாடி வருகிறது.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் போது தென் ஆப்பிரிக்கா அதன் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் கொண்டு தாக்குதல் நடத்தியது. அதனை சமாளிக்க முடியாத இந்தியா 245 ரன்னில் சுருண்டது. அவர்களின் திட்டத்தை வைத்து அவர்களை மடக்கி விடலாம் என கணக்குப் போட்ட ரோகித் இந்திய வேகப்பந்துவீச்சு வரிசையை கட்டவிழ்த்துவிட்டார்.
ஆனால், அவர் நினைத்ததுப் போல திட்டம் பலிக்கவில்லை. பும்ரா, சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சு எடுபட பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். இவர்களுக்கு இடையில் பந்துவீசிய அஸ்வின் 8 ஓவர்களுக்கு 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கச்சிதமாக இருந்தார். ஆனால், ரோகித் அஸ்வினை ஓரம் கட்டிவிட்டு வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் தொடர்ந்து ஓவர்களை வீச வாய்ப்பு கொடுத்தார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் வாரிக் கொடுத்த நிலையில், பந்துவீச்சை நன்கு கணித்த தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் 2ம் நாளிலும் கூடுதலாக ரன்களை சேர்த்தனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. இதனால், அஸ்வினுக்கு ஓவர் கொடுக்காத ரோகித் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.
இதனைத் திருத்திக் கொண்ட ரோகித் இன்று (வியாழக்கிழமை) 3வது நாள் போட்டி தொடங்கியது போது முதலில் பும்ரா, சிராஜ்-க்கு ஓவர் கொடுத்தார். பிறகு அஸ்வின் பக்கம் தனது பார்வை திருப்பினார். மிகவும் சிக்கமாக வீசிய குடைச்சல் கொடுத்த அவர் 19 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். கேப்டன் ரோகித் தனது தவறை திருத்திக் கொண்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“