இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் அவரது கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்டை தவற விட்ட அவர், அதற்கடுத்த 2, 3 மற்றும் 4-வது போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். இருப்பினும் அந்த போட்டிகளில் அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணி 2 மற்றும் 4 -வது போட்டிகளில் தோல்வி கண்டது. மழை காரணமாக 3-வது டெஸ்ட் சமனில் முடிந்தது.
இதனையடுத்து சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டியில் தானாகவே அணியிலிருந்து வெளியேறினார். இதனால் இந்த தொடர் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று கருத்துகள் நிலவின. ஆனால் தான் இப்போதைக்கு ஓய்வை அறிவிக்கும் எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவது இல்லை, கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்று ரோகித் தெரிவித்திருந்தார்.
ரோகித்தை கலாய்த்த ஆஸி., வீரர்
இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமன் கட்டிச், ரோகித் சர்மாவுக்கு ஸ்டாண்ட்-அப் காமெடியில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று கூறி அவரை கலாய்த்துள்ளார்.
இதுகுறித்து சைமன் கட்டிச் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசுகையில், "நீங்கள் அவரது ரன்களைப் பார்த்தால், அவை அதிர்ச்சி அளிக்கின்றன. அதனை இந்த டெஸ்டில் பார்த்தோம். அவர் டெஸ்டில் இருந்து விலகுவது மிகவும் தன்னலமற்றது.
நான் அந்த நேர்காணலைப் பார்த்தேன். அதில் அவர் நன்றாக பேசினார். கிரிக்கெட் விளையாடி முடித்த பிறகு, ஸ்டாண்ட்-அப் காமெடியில் அவருக்கு எதிர்காலம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஏனெனில் அவரது நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் எளிதாக இருக்காது. 37 ரன்களை விட அதிகமாக எடுக்கவும், மேலும் ரன்கள் குவிக்கவும் அவருக்கு பசி இருக்கிறதா என்று அவருக்கு மட்டுமே தெரியும். அதனால் தான் சொல்கிறேன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அவருக்கு எளிதான தொடராக இருக்காது.
இங்கிலாந்து அணி முன்னேறிக்கொண்டிருக்கிறது. அவர்களிடம் விரைவாக ரன்கள் எடுக்கும் சில நல்ல இளம் வீரர்கள் உள்ளனர். கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
அவர் அதைத் தேர்வுசெய்து, இந்தியத் தேர்வாளர்கள் முதலில் அவரைத் தேர்ந்தெடுத்தால் அது கடினமான சுற்றுப்பயணமாக இருக்கும் என்று நான் தைரியமாகக் கூறுகிறேன். அவரது ரன்கள் போதியதாக இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்பது 37 வயது நிரம்பியவர்களுக்கான இடம் அல்ல. வரலாறு அதைத் தெரிவிக்கிறது, மேலும் ரோகித் சர்மாவுக்கு மட்டுமே பசியைத் தொடரலாமா என்பது தெரியும்." என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.