10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 16-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்தப் போட்டிக்கு முன்பாக லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர் கானுடன் ரோகித் சர்மா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரோகித் சர்மா ஜாகீர் கானிடம், "என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் சரியாகச் செய்தேன், இப்போது நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை" என்று அவர் கூறுகிறார்.
ரோகித் இப்படி கூறியிருப்பது மும்பை அணி மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பைக்கு 5 முறை கோப்பை வாங்கிக் கொடுத்த ரோகித்தை நீக்கி விட்டு, கடந்த சீசனில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான அணி அடுத்தடுத்த தோல்வி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. மேலும் அணிக்குள் ஒற்றுமை இல்லை என்றும், இரண்டு பிரிவாக வீரர்கள் இருப்பதாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயரிடம் ரோகித் பேசிக் கொண்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது ரோகித் ஜாகீர் கானுடன் பேசிய வீடியோ வெளியாகி அடுத்த சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதனால், அணிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.