Rohit Sharma | Hardik Pandya | Mumbai Indians: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியாக புள்ளிகள் பட்டியலில் கடைசி உள்ளது. இத்தொடரில் களமாடும் மற்ற 9 அணிகள் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வென்றுள்ளன.
மும்பையின் இந்த தோல்விக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அணியின் கேப்டன்சி மாற்றமே காரணம் என்று கூறி வருகிறார்கள். இந்த சீசனுக்கு முன்னதாக, மும்பை அணியின் கேப்டன் நீண்ட கால கேப்டனாக இருந்து, அணிக்கு 5 சாம்பியன் பட்டங்களை வாங்கிக் கொடுத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது இடத்தை நிரப்ப ஆல்ரவுண்டர் வீரரும், குஜராத் டைட்டன்ஸ் கேப்டனுமாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடு முறையில் மாற்ற ஒப்பக்கொண்டது மும்பை நிர்வாகம்.
வந்தால் கேப்டனாகத் தான் வருவேன் என உத்தரவு போட்ட ஹர்திக் பாண்டியா தலைமையில் களமாடிய மும்பை அணி, தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, திங்கள்கிழமை சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி என ஹாட்ரிக் தோல்வியுற்றது. போதாக்குறைக்கு ஹர்திக் பாண்டியா செல்லும் இடமெல்லாம் அவருக்கு எதிரான முழக்கம் மைதானங்களில் கூரையை கிழிக்கும் அளவுக்கு உள்ளது.
கடைசியாக நடந்த 2 போட்டிகளிலும் முன்னாள் கேப்டன் ரோகித் பீல்டிங் செட் செய்வதை காணமுடிந்தது. மும்பையின் தற்போதையை நிலைக்கு அந்த அணி அடுத்த ஆட்டத்தில் கண்டிப்பாக வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில், அணி தாவி வந்திருக்கும் ஹர்திக் பாண்டியாயை முன்னாள் கேப்டன் ரோகித்துடன் ஒப்பிட்டு பார்க்க ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். மும்பையின் தோல்விக் கதை தொடரும் பட்சத்தில் அந்த அணி நிர்வாகம் கேப்டன்சி குறித்து மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்படும். இதைத் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாகும் வாய்ப்பு குறித்து திவாரி பேசுகையில், "அது நடக்கலாம்" என்று ஒரே வார்த்தையில் பளிச்சென்று கூறினார். இது குறித்து கிரிக்பஸ் இணைய பக்கத்திற்கு அவர் அளித்து பேட்டியில், "அந்த அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் அதிரடி முடிவுகளை எடுக்கத் தயங்குவதில்லை. ரோகித்திடம் இருந்து கேப்டன் பதவியை எடுத்து ஹர்திக்கிடம் கொடுத்தபோது அதனை ஆரம்பித்துவிட்டார்கள். 5 பட்டங்களை வென்ற கேப்டனை நீங்கள் மாற்றினால் இப்போது அது மிகவும் பெரியது. இப்போது அவர்கள் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாததால், கேப்டன் பதவியும் சோகமாகத் தெரிகிறது, தவறுகளும் நடக்கின்றன.
ஹர்திக் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீச விரும்பவில்லை என்பது அவர் அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை அது குறிக்கிறது. அவர் முதல் இரண்டு ஆட்டங்களில் பந்துவீசினார். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் ஸ்விங் இருந்த சூழ்நிலையில், அவர் பெற்ற வரவேற்பின் மூலம் அழுத்தத்தை உணர்ந்தார் என்று நினைக்கிறேன்.
அடுத்த போட்டிக்குள் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரோகித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்ற உணர்வு எனக்கு உள்ளது.
ஐதராபாத் அணி 277 ரன்கள் எடுத்தது. ஆனால் பந்துவீச்சில் மாற்றங்களைப் பாருங்கள். கடைசி ஓவரை ஷம்ஸ் முலானி வீச வந்தார், (ஜஸ்பிரித்) பும்ரா 13வது ஓவரில் கொண்டு வரப்பட்டார். பேட்டிங் வரிசையில் நிலைத்த தன்மை இல்லை. யாருக்கும் நிரந்தர இடம் இல்லை. சில சமயங்களில் திலக் வர்மா முன்னதாகவே பேட்டிங் செய்ய வந்துவிடுகிறார், சில சமயங்களில் டெவால்ட் ப்ரீவிஸ் வந்து விடுகிறார்.
அவரது கேப்டன்சியை மிகவும் சராசரி கேப்டன்சி தான் என்பேன். அணியின் சூழலும் சரியில்லை. எனவே, கிரிக்கெட் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு (ரோகித்தை மீண்டும் கேப்டனாக ஆக்குவது) எடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
மனோஜ் திவாரி ஐ.பி.எல். பின்னணி
2010ல் ஐ.பி.எல். தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மனோஜ் திவாரி, அதே சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு டிரேடு முறையில் மாற்றம் செய்யப்பட்டார். அந்த அணிக்காக 2012 வரை விளையாடினார். அதன்பிறகு, 2017ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்ட திவாரி, 2018 ஐ.பி.எல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.