IPL 2024 | Rohit Sharma | Mumbai Indians: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். 5 முறை சாம்பியனான மும்பையை கடந்த சீசன் வரையில் தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்தினார்.
ஆனால், இந்த சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்பு, குஜராத் டைட்டன்ஸ் அணியை 2 சீசன்களாக வெற்றிகரமாக வழிநடத்திய (2022ல் சாம்பியன், 2023ல் இறுதிப்போட்டி) ஹர்திக் பாண்டியாவை டிரேடு முறையில் அழைத்தனர் மும்பையின் நிர்வாகிகள். அவரோ, தான் வந்தால் கேப்டனாகத் தான் வருவேன் என அடம்பிடித்தார். இதனால், 5 முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியை ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. ரோகித் சர்மா சாதாரண வீரராக ஆடுவதாக ஒப்புக்கொண்டார்.
ரோகித் சர்மாவின் கேப்டன்சி மாற்றம் ஏற்கனவே சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டு பெரும் விவாதத்தை தூண்டி இருந்த நிலையில், அகமதாபாத்தில் குஜராத் அணிக்கு எதிராக நடந்த தொடக்கப் போட்டியில் மும்பையை வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அப்படியொரு வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருந்தார்கள். அவர் திரும்பிய பக்கமெல்லாம் அவருக்கு எதிரான முழக்கம் ஒலித்தது.
தங்களது அணியை பாதியிலே விட்டு சென்றதாக குஜராத் ரசிகர்களும், ஹிட்மேனின் பதவியை பறித்துக் கொண்டதாக ரோகித் ரசிகர்களும் முழக்கமிட்டனர். தவிர, களத்திற்கு வெளியே கைகலப்பும் அரங்கேறியது. அகமதாபாத்துடன் நிறுவிடாமல் மும்பை அணி சென்ற இடமெல்லாம், ஏன் அவர்களின் சொந்த மைதானத்தில் கூட கேப்டன் பாண்டியாவுக்கு எதிரான கோஷங்கள் முழுங்கினர். முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும், குறிப்பாக இந்திய அணிக்காக ஆடும் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினும் கொடுத்த அறிவுரைகள் அந்த முழக்கத்தை கட்டிப் போட்டன.
எல்லாம் சரியாக நகரத் தொடங்குவது போல் தோன்றிய சூழலில், மும்பையின் அடுத்தடுத்த தோல்விகள் கேப்டன் பாண்டியாவின் கேப்டன்சி மீதான கேள்விகளை எழுப்ப தூண்டின. சில போட்டிகளில் கம்பேக் கொடுத்தாலும், மும்பை பிளே - ஆஃப்க்கு தகுதி பெறாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அந்த அணியின் ரசிர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வல்லுநர்களும் மும்பை நிர்வாகத்தை வறுத்தெடுத்தனர்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மும்பை அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனை உறுதிப் படுத்தும் வகையில், டெல்லி போட்டிக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் மூத்த வீரர்களான ரோகித், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். சமீபத்தில் பயிற்சி ஊழியர்களை சந்தித்துப் பேசிய அவர்கள் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பற்றி டிரஸ்ஸிங் ரூமில் சலசலப்பு நிலவுகிறது என்று கூறினர்.
இந்த விவகாரம் ஓய்ந்து முடிவதற்குள், ரோகித் சர்மா கொல்கத்தா அணியின் பயிற்சியாளரிடம், அணிக்குள் எதுவும் சரியாக இல்லை என்றும், இது தான் மும்பை இந்தியன்சுக்கு தான் ஆடும் கடைசி சீசன் என்றும் கூறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தாவில் இன்று நடைபெற உள்ள 60வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவிருக்கும் சூழலில், ரோகித் சர்மா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகிய இருவரும் பேசிக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட நிலையில், சில மணி நேரங்களில் அந்த வீடியோவை நீக்கிவிட்டது.
இருப்பினும், ரசிகர்கள் அந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவில் ரோகித் சர்மா அபிஷேக் நாயரிடம்,"எல்லாம் ஒவ்வொன்றாக மாறிக்கொண்டே இருக்கிறது. அது அவர்களைப் பொறுத்தது, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்ன தான் இருந்தாலும் அது என் வீடு. அது நான் கட்டிய கோவில். ஆனா, இது தான் என் கடைசி சீசன்" என்று கூறுகிறார்.
ரோகித் சர்மா இப்படி கூறியதாக வெளியாகி இருக்கும் இந்த வீடியோ கிரிக்கெட் வட்டாரத்திலும், மும்பை அணி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. தற்போது அவரது ரசிகர்கள் ரோகித்துக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“