இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்கி நடக்கவிருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Don’t want to take undercooked Shami to Australia: Rohit Sharma
இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் பேசுகையில், “உண்மையைச் சொல்வதென்றால், முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான தொடரிற்கோ அல்லது ஆஸ்திரேலியத் தொடருக்கோ பொருத்தமாக இருப்பாரா என்பதைப் பற்றி இப்போது அவரை அழைப்பது எங்களுக்கு மிகவும் கடினம். அவருக்கு சமீபத்தில் தான் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது, இது மிகவும் அசாதாரணமானது.
அவர் உடற்தகுதி பெறும் பணியில் இருக்கிறார். மேலும், 100 சதவீதத்தை எட்டும் பயிற்சியில் உள்ளார். அவருக்கு முழங்காலில் வீக்கம் இருப்பதால், அவர் அதில் இருந்து மீள சிறிது காலம் எடுக்கிறது. எனவே, அவர் மீண்டும் தன்னை ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. தற்போது அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார். அங்குள்ள பிசியோக்கள் மற்றும் மருத்துவர்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.
ஷமி 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரை அரைகுறை உடல் தகுதியுடன் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வர நாங்கள் விரும்பவில்லை, அது எங்களின் சரியான முடிவாக இருக்காது. ஒரு வேகப்பந்து வீச்சாளர், கிரிக்கெட்டை அதிகம் தவறவிட்ட பிறகு, திடீரென்று வெளியே வந்து சிறந்து விளங்குவது மிகவும் கடினமானது, அது சிறந்ததல்ல.
அவர் குணமடைந்து 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க போதுமான அவகாசம் வழங்க விரும்புகிறோம். பிசியோக்கள், பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் அவருக்கான திட்டத்தை அமைத்துள்ளனர். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார், அதன் பிறகு கணுக்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருகிறார். இந்தியாவுக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 27.71 சராசரியில் 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“