Rohit Sharma | Indian Cricket Team: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கேப்டன் ரோகித் சர்மா. கடந்த 2007 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அடியெடுத்து வைத்த அவர், இதுவரை 59 டெஸ்ட், 262 ஒருநாள், 151 டி20 போட்டிகள் முறையே, 4137, 10709, 3974 ரன்களை குவித்துள்ளார். தற்போது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார்.
இந்த நிலையில், ரோகித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீச்சில் தனக்கு குடைச்சல் கொடுத்த பந்துவீச்சாளர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்தப் பந்துவீச்சாளர் தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் என்றும், தான் பேட் செய்வதற்கு முன் அவரது வீடியோக்களை 100 முறை பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துபாயின் 103.8 ரேடியோ உடனான உரையாடலில் ரோகித் சர்மா, "நான் பேட்டிங் செய்ய செல்வதற்கு முன்பு 100 முறையாவது அவரது வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தான். அவர் கிரிக்கெட் விளையாட்டில் மிகப் பெரிய ஜாம்பவான். மேலும் அவர் தனது கேரியரில் என்ன சாதித்திருக்கிறார் என்பது பார்ப்பதற்கு மிகச்சிறப்பாக இருக்கிறது.
நான் அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர் விரைவாக பந்துவீசுவார். அதே வேகத்தில் அவர் பந்தை ஸ்விங் செய்தார். அது எளிதானது அல்ல, மிகவும் கடினமானது. மேலும் அவர் ஒரு கடுமையான போட்டியாளராக இருந்தார். அவர் எல்லாவற்றையும் செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒவ்வொரு அமர்விலும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினார். எனவே அவருக்கு எதிராக ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“