இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, களத்திற்கு வருவதற்கு முன்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான ஃபார்மில் இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் அவர் ஆடிய போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதாக பலர் தெரிவிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ரோகித் ஷர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் ஸ்காட் போலாந்திடம் தனது விக்கெட்டை ரோகித் ஷர்மா இழந்தார். அடுத்த இன்னிங்ஸில் பேட் கம்மின்ஸ், அவரை பெவிலியன் அனுப்பினார். முன்னதாக ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால், நோ-பால் என தீர்ப்பு வழங்கப்பட்டதால், அப்போது ரோகித் ஷர்மாவின் விக்கெட் தப்பியது.
'உடற்பயிற்சி செய்ய வேண்டும்'
இந்நிலையில், ரோகித் ஷர்மா குறித்து இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, "ரோகித்தின் கால்கள் அசைய வேண்டிய விதத்தில் செயல்படவில்லை என நான் கருதுகிறேன். களத்திற்கு வருவதற்கு முன்பு ரோகித் ஷர்மா சிறிது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவர் தனது கால்களை சுழற்ற முயற்சிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மேலும், "ரோகித் ஷர்மாவின் கால்கள் மெதுவாக தான் இயங்க தொடங்கும். இது சமீபத்திய பிரச்சனை இல்லை. வயதாகும் போது இந்த பிரச்சனை அதிகரிக்கிறது" எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், “முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக, ரோகித் ஷர்மா சிறிது ஜாகிங் செய்து களத்திற்கு வரலாம்“ எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“