13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக நாட்டின் 12 நகரங்களில் மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று சந்திக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியின் தேதி மாற்றப்பட உள்ளது.
10 ஆண்டுகளில் ஒரு ஐ.சி.சி கோப்பை கூட இல்லை
உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா அதன் சொந்த மண்ணில் போட்டியை நடத்துகிறது. உலக கிரிக்கெட் அரங்கில் வலுவான அணியாக திகழ்ந்து வரும் இந்தியா கடைசியாக 2011ல் தான் ஐ.சி.சி-யின் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு, 2015 மற்றும் 2019ல் ஏமாற்றம் அளித்தது. இதனிடையே, 2013ல் ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா, அதன்பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஐ.சி.சி கோப்பை கூட வெல்லவில்லை. இதனால், இம்முறை இந்தியா வெல்ல வேண்டும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த தொடரில் உலகக் கோப்பை இந்தியா கோப்பை வெல்ல பேட்டிங் துறையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அவ்வகையில், இந்தியாவின் தூண்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளனர். இதில், கோலி தனது ஃபார்மை மீட்டெடுத்து சிறப்பான நிலையில் இருந்து வருகிறார். தவிர, ஐசிசி நடத்தும் முக்கிய போட்டிகளில் அவர் சிறப்பான சாதனைகளை பதிவு செய்துள்ளார். குறிப்பாக, 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்து அணிக்கு வெற்றிக்கு உதவினார். இதேபோல் 2014, 2016 டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடினார்.
திணறும் ஹிட்மேன்
ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து ஏராளமான சாதனைகளை படைத்துள்ள ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோகித் சர்மா 50 ஓவர் நாக் அவுட் போட்டிகளில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டதில்லை. குறிப்பாக 2015 உலகக்கோப்பை அரையிறுதியில், 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் சொதப்பிய அவர், 2019 உலகக்கோப்பையில் லீக் சுற்றில் அடித்து நொறுக்கி 648 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் வெறும் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
அவர் இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, 2022 டி20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போன்ற பெரிய போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதனால், அவர் இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம்.
சல்மான் பட் கருத்து
இந்நிலையில், சாதாரண போட்டிகளில் சிறப்பாக செயல்படும் ஹிட்மேன் என்று பெயரெடுத்துள்ள ரோகித் சர்மா அழுத்தம் நிறைந்த ஐ.சி.சி நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி இந்தியாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் விமர்சித்துள்ளார். மேலும், ஏற்கனவே ரோஹித், கில் இருக்கும் போது வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறக்கி சோதிக்கப்பட்டது வீண் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சல்மான் பட் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "இந்தியாவின் சோதனைகள் குழப்பமாக இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் ஒரு போட்டியில் 200 ரன்கள் அடித்த ஒருவரை (இஷான்) அடுத்த போட்டியிலேயே நீக்கிய நீங்கள் இந்த சோதனை முயற்சியில் அவர் 1 இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்தாலும் என்ன முடிவுக்கு வரப் போகிறீர்கள்? அதனால் அது போன்ற வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டாலும் அந்த வீரருக்கு திருப்தியை கிடைக்காது.
இத்தனை சோதனைகள் நிகழ்த்தியும் இறுதியில் உங்களுடைய 2வது தேர்வு என்ன என்பது தெரியாமலேயே இருக்கிறது. ஏனெனில் இஷான் கிஷன் இனியும் உங்களுடைய பெஞ்சில் அமர்ந்திருக்க போகும் வீரர் கிடையாது. 2வதாக ரோகித் சர்மா மிகப்பெரிய வீரர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் அவரை போன்ற சில வீரர்கள் அங்கே நீண்ட காலமாக இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் அழுத்தம் உருவாகும் போது அவர்களால் வெற்றிகரமாக செயல்பட முடிவதில்லை. குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவதில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவும் அவர்களுடைய முக்கிய வீரர்களும் உழைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
ஏற்கனவே கேப்டனாக 2 ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்த ரோகித் சர்மா இம்முறை சொந்த மண்ணில் 2023 கோப்பையை வெல்ல தவறினால் கேப்டன்சி பதவியை இழக்கும் சூழல் ஏற்படும். அதற்கான குரல் முன்னதாக பெற்ற 2 தோல்விகளின் போது எதிரொலித்து இருந்தது. அதனை ரோகித் சமாளித்து சாதனை நிகழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.