பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 185 ரன்களுக்கு அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னுக்கு அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பிரசித், சிராஜ் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினார். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெறும் நிலையில், ஆஸ்திரேலியாவை ஆல்-அவுட் செய்த இந்தியா தனது 2-வது இன்னிங்சில் ஆடி வருகிறது.
ரோகித் பேட்டி
இந்நிலையில், மோசமான பார்ம் காரணமாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அதனால், பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், கேப்டன் ரோகித் சர்மா விலகியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் பொதுத் தளத்திலும், சமூக வலைதள பக்கங்களிலும் எழுப்பப்பட்ட வருகிறது.
இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது தொடர்பாக ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் பார்மில் இல்லை. ரன்கள் எடுக்கவில்லை. இது ஒரு முக்கியமான ஆட்டம். நல்ல பார்மில் உள்ள வீரர் போட்டிக்கு தேவை. இதனால் தான் நான் போட்டியில் இருந்து விலகினேன் . பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் என்னுடைய முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை.
மைக் லேப்டாப் அல்லது பேனா வைத்திருக்கும் யாரோ ஒருவர் சொல்வது உங்கள் வாழ்க்கையை மாற்றாது. இந்த விளையாட்டை நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். எப்போது செல்ல வேண்டும். எப்போது விளையாடக்கூடாது. எப்போது டக்-அவுட்டில் உட்கார வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. நான் அனுபவம் உள்ளவன், இரு குழந்தைகளின் தந்தை, என் வாழக்கையில் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். எனக்கும் கொஞ்சம் மூளை இருக்கிறது. நான் எங்கும் போகப் போவதில்லை" என்று அவர் கூறினார்.