ஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன்! - கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா

இப்போதும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது

இப்போதும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன்! - கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா

ஆசைத் தம்பி

இந்திய அணியில் 'ஹிட்மேன்' என்று அழைக்கப்படுபவர் ரோஹித் ஷர்மா. சமீபத்தில் நடந்த ஐபிஎல்-லில் இவரது தலைமையின் கீழ் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. ஆரம்பத்தில் பேட்டிங்கில் ரோஹித் தடுமாற, மும்பையும் தடுமாறியது. தொடர் தோல்விகள். அதன்பின், பேட்டிங்கில் ரோஹித் கியரை மாற்ற, மும்பையும் வெற்றிகளை அடுத்தடுத்து வசமாக்கியது. இருப்பினும், வாழ்வா சாவா ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், தொடரை விட்டு வெளியேற நேரிட்டது. இதனால் மிகுந்த அதிருப்தியில் இருந்தார் கேப்டன் ரோஹித். ரசிகர்கள் அவரது பேட்டிங்கையும் விமர்சனம் செய்தனர்.

Advertisment

அதேபோன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 7 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டவர் ரவீந்திர ஜடேஜா. ஏன்பா இவரை டீமில் எடுத்தீங்க?-னு ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு தொடக்க போட்டிகளில் மெகா சொதப்பல் வேட்டை நடத்தினார் ஜடேஜா. சிஎஸ்கே ஆடிய முதல் 9 போட்டியிலும் விளையாடிய ஜடேஜா அடித்த மொத்த ரன்கள் 59. வீழ்த்திய மொத்த விக்கெட்டுகள் 3. இதனால் அவர் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அதன்பிறகு, மீதமிருந்த போட்டிகளில் ஜடேஜாவின் பவுலிங் பாராட்டும்படியே அமைந்து இருந்தது. குறிப்பாக, பெங்களூரு அணிக்கு எதிரான 2வது லீக் போட்டியில், கேப்டன் கோலியை போல்டு ஆக்கிவிட்டு, அதைக் கொண்டாடாமல் அமைதியாக இருந்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கோலி மட்டுமின்றி, அந்தப் போட்டியில் மற்ற வீரர்களை அவர் அவுட்டாக்கிய போதும் எதையுமே கொண்டாடாமல், உணர்ச்சியற்றவர் போலவே இருந்தார். அப்போது பரிசளிப்பு நிகழ்வில், 'ஏன் விராட் கோலி விக்கெட்டுக்கு கொண்டாடவில்லை?' என கேள்வி கேட்டதற்கு பதிலளித்த ஜடேஜா, 'நான் அப்போது தான் முதல் பந்தை வீசியிருந்தேன். இதனால், விக்கெட்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை' என்று பதிலளித்தார்.

இதனால், ரசிகர்கள் 'இவர் என்ன சைக்கோவா?' என்று கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர். இறுதியில் சிஎஸ்கே கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில், விக்ரம் சத்யே நடத்தும் 'வாட் த டக்' எனும் ஆன்லைன் சாட் ஷோவில் ரோஹித் ஷர்மாவும், அஜின்கியா ரஹானேவும் கலந்து கொண்டனர். அப்போது, ரவீந்திர ஜடேஜா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் காட்டிய உயிர் பயம் குறித்து அதே பயத்துடன் பேசியுள்ளனர். அப்போது பேசிய ரோஹித், "ஜடேஜாவை அப்போதே முகத்தில் ஓங்கி குத்தலாம் போல என்று இருந்தது" என தெரிவித்துள்ளார்.

அப்படி என்ன செய்தார் ஜடேஜா?

Advertisment
Advertisements

ரோஹித் கூறுகையில், "இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, நாங்கள் எங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஒருநாள் நான் என்னுடைய மனைவி, ரஹானே, ஜடேஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் காட்டில் சஃபாரி பயணம் செல்ல முடிவு செய்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு ஜீப்பில் அமர்ந்து தென் ஆப்பிரிக்க காட்டுக்குள் பயணித்துக் கொண்டிருந்தோம். அனைத்து மிருகங்களையும் அமைதியான முறையில் ரசித்து வந்தோம்.

பயணத்தை தொடங்கும் போதே நிர்வாகிகள், மிருகங்களைச் சீண்டக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை செய்து எங்களை அனுப்பிவைத்தார்கள். அதனால், மிக மிக எச்சரிக்கையுடன் பயணம் செய்தோம். பயமும் எங்களை ஆட்கொண்டிருந்தது. ஏனெனில், ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிறைய மிருகங்கள் அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு இடத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி நடந்தோம். அங்கு, சாலையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 சிறுத்தைப்புலிகள் நடந்து சென்றன.

அதைப் பின்பற்றியே நாங்களும் சத்தம் போடாமல் நடந்து சென்றோம். எங்களின் மனைவிகளும் அமைதியாக பயத்துடனேயே வந்தனர். அடுத்த வினாடி என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது என்ற பயத்துடனே நடந்தோம். அப்போது, நான், ரஹானே மனைவி ராதிகா, என் மனைவி ரித்திகா, ஜடேஜா ஆகியோர் காட்டின் நடுவே அடைந்துவிட்டோம். வாகனத்தைவிட்டு நீண்டதொலைவு வந்துவிட்டோம் என எங்களுக்கு தெரிந்தது. எனவே, வந்தது போதும்... மீண்டும் ஜீப்பிற்கு செல்லலாம் என முடிவெடுத்த போது, இரு சிறுத்தைப்புலிகள் ஏதோ இரையை வாயில் கவ்வியபடி இருந்ததைப் பார்த்தோம்.

அப்போது திடீரென ஜடேஜா வித்தியாசமான ஒலி ஒன்றை எழுப்பினார். உடனே, அந்தச் சிறுத்தைப்புலிகள் எங்களைத் திரும்பிப் பார்த்தன. ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டோம். பின் மீண்டும் அமைதியாகச் சென்ற சிறுத்தைப்புலிகளை, மீண்டும் ஜடேஜா சிறு சத்திமிட்டு, வித்தியாசமாக ஊளையிட்டுக் கத்தி அழைத்தார். இந்த சத்தத்தைக் கேட்ட சிறுத்தைப்புலிகள் அதுவரை அமைதியாக இருந்த நிலையில் அதன்பின் எங்களை பார்த்து லேசாக உறுமத் தொடங்கியன.

உடனே நான் ஜடேஜாவைப் பார்த்து, 'என்ன செய்கிறாய்?. நாம் அனைவரும் காட்டுக்குள் இருக்கிறோம் மறந்துவிட்டாயா?. சிறுத்தைப்புலிகள் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா?. அவை இரையை வைத்து இருக்கின்றன. பசியோடு இருக்கின்றன. அமைதியாக இரு' என்று கோபமாகக் கூறினேன். அந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாதது.

மறுபடியும் ஜடேஜா சத்தமிட்டதும், சிறுத்தைப்புலிகள் மீண்டும் எங்களை நோக்கி கோபத்துடன் திரும்பின. இதைப் பார்த்ததும், எனக்கு ஜடேஜா மீது கடும் கோபம் ஏற்பட்டது. ஏனென்றால், எங்களுடன் எங்களின் மனைவிகளும் இருக்கிறார்கள், அவர்களின் நிலையை நினைத்துப் பார்க்காமல் கத்திய ஜடேஜாவைப் பார்க்க ஆத்திரமாக வந்தது. அவரை ஓங்கி முகத்தில் குத்திவிடலாம், கன்னத்தில் அறைந்துவிடலாம் எனத் தோன்றியது. ஆனால், எல்லை மீறி ஏதும் செய்துவிடக்கூடாது என்பதால், என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். இல்லையெனில், அப்போதே அவரை அறைந்திருப்பேன். இப்போதும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது" ரோகித் ஷர்மா தெரிவித்தார்.

ஜடேஜாவை பற்றி ரோஹித் இவ்வாறு கூறியிருப்பது சமூக தளங்களில் ரசிகர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. (மரண பயத்தை காட்டிட்டான் பரமா!).

India Vs South Africa Ravindra Jadeja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: