Rohit Sharma | India vs England 3rd Test Rajkot: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று வியாழக்கிழமை (பிப்.15) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரோகித் அசத்தல் சதம்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர்.
போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில், மார்க் வுட் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து வந்த ரஜத் படிதாரும் 5 ரன்களில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 8.5 ஓவர்களில் 33 ரன்களுக்கு அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த கட்டான சூழலில் களத்தில் இருந்த கேப்டன் ரோகித்துடன் ஆல்ரவுண்டர் வீரரான ஜடேஜா கைகோர்த்தார். மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்த இந்த ஜோடி நிதானமாகவும், பொறுமையாக ஆடி ரன்களை எடுத்தனர். இதில், கேப்டன் ரோகித் சர்மா 71 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதேபோல், ஜடேஜா 97 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் பொறுப்பான ஆட்டத்தையும், தனது தரமான பேட்டிங்கையும் வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் 157 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் தனது 11வது சதத்தையும், இங்கிலாந்துக்கு எதிராக 3வது சதத்தையும் பதிவு செய்தார்.
ரோகித் தனது அசத்தலான சதம் மூலம் பிரமிக்க வைக்கும் சாதனைகளை படைத்துள்ளார். மேலும், 73 ஆண்டுகால சாதனையை முறியடித்தும் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம் சர்வதேச சதத்தை அடித்த மிக வயதான இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் பெற்றார்.
1951-ல் விஜய் ஹசாரேவின் சாதனையை முறியடித்து, சர்வதேச அளவில் சதம் அடித்த வயதான இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் முறியடித்தார். (ரோஹித் ஷர்மா vs இங்கிலாந்து, 2024: 36 வயது, 291 நாட்கள் - விஜய் ஹசாரே vs இங்கிலாந்து, 1951: 36 வயது, 278 நாட்கள்).
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலிலும் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார். இதன்மூலம் 80 சிக்ஸர்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் முதல் வீரேந்திர சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதல் இடத்திலும், 78 சிக்ஸர்களுடன் தோனி 3வது இடத்திலும் உள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/76842637-1aa.jpg)
இந்திய கேப்டனாக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் அடிப்படையில், ரோகித் புகழ்பெற்ற கபில்தேவ் சாதனையை சமன் செய்தார். ரோகித் இப்போது இந்திய கேப்டனாக மூன்று டெஸ்ட் சதங்களைப் பெற்றுள்ளார். அவர் விராட் கோலி (20), சுனில் கவாஸ்கர் (11), முகமது அசாருதீன் (9), சச்சின் டெண்டுல்கர் (7), எம்எஸ் தோனி (5), சவுரவ் கங்குலி (5), எம்ஏகே பட்டோடி (5), ராகுல் டிராவிட் (4) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒன்பதாவது இடத்தில் உள்ளார்
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் அடித்த டெஸ்ட் சத பட்டியலில் ரோகித் சர்மா 3 பேருடன் 2வது இடத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சுனில் கவாஸ்கர் 4 சதங்களுடன் உள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/7759a5ca2ec516f5b1e67e67d0660fd133a14f1775847ca4bd614d7b33efe3ce.jpg)
இன்றைய போட்டியில் ரோகித் தொடர்ந்து சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த நிலையில், அவர் 196 பந்துகளில் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 4 விக்கெட்டுக்கு 33 ரன்கள் என இருந்தபோது இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் ஜடேஜா உடன் அமைத்த நிலையில், 204 ரன்கள் என்கிற பிரமிக்க வைக்கும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டு இருந்தார். அவரது சிறப்பான ஆட்டத்திற்கு ரசிகர்கள், இந்திய வீரர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“