sports | cricket | rohit-sharma: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இலங்கை கொழும்பு மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
கேப்டன் ரோகித் சாதனை
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் ரோகித் 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் தனது 248-வது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்திய வீரர்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது வீரராக ரோகித் உள்ளார். முதல் 5 இடங்களில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, டிராவிட்,தோனி ஆகியோர் உள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிராக 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் ரோகித் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“