Hardik Pandya | Rohit Sharma | IPL 2024 | Mumbai Indians | Sunrisers Hyderabad: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று புதன்கிழமை ஐதராபாத்தில் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த அணியாக சாதனை படைத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரன் மழை பொழிந்த ஹென்றிச் கிளாசென் 80 ரன்களும், டிராவிஸ் ஹெட் 62 ரன்களும், அபிஷேக் சர்மா 63 ரன்களும், ஐடன் மார்க்ரம் 42 ரன்களும் எடுத்து மிரட்டினர்.
இதனைத் தொடர்ந்து, 278 ரன்கள் கொண்ட துரத்திய மும்பை அணியில் ரோகித் சர்மா (26), இஷான் கிசான் (34), நமன் திர் (30), திலக் வர்மா (64) போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடும் முயற்சியில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதேபோல், கடைசி நேரத்தில் களத்தில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால், 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 246 ரன்கள் மட்டுமே எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது.
கர்மா இஸ் எ பூமராங்
இந்தப் போட்டியில், ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி மும்பை பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதனால் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா எப்படி பீல்டிங்கை செட் செய்வது என்று தெரியாமல் தடுமாறினார். குஜராத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ரோகித் சர்மாவை அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்த கேப்டன் ஹர்திக் பீல்டிங் செட் செய்வதை ரோகித்திடமே பார்த்துக் கொள்ள சொன்னார்.
மும்பை அணி அடி வாங்குவதை பார்த்து கலங்கிப் போன ரோகித்தும், ஹர்திக் சொன்னபடி பீல்டிங் செட் செய்தார். ஒரு கட்டத்தில் கேப்டன் ஹர்திக்கை ரோகித் பீல்டிங்கில் 'நீ அங்கே போய் நில்' என்று கூறினார். ஹர்திக் மறுவார்த்தை பேசாமல் அங்கே ஓடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் கர்மா இஸ் எ பூமராங் என்று கூறி ஹர்திக்கை கலாய்த்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“