Sarfraz Khan | India Vs England | Ravindra Jadeja: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று வியாழக்கிழமை (பிப்.15) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் 131 ரன்களுக்கு அவுட் ஆனார். சதம் விளாசிய ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ரோகித் சர்மா டென்ஷன்
இந்தப் போட்டியில் ரோகித்துக்கு பின் களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஜடேஜாவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அரைசதம் அடித்து அசத்தினார். 81.5 வது ஓவரில் ஜடேஜா ஆண்டர்சன் வீசிய பந்தை எதிர்கொண்டார். அப்போது பந்தை மிட்-ஆன் திசையில் விரட்ட ரன் ஓட இசைவு கொடுக்கவும், மறுமுனையில் இருந்த சர்பராஸ் கான் கடகடவென ஓடி க்ரீஸை விட்டு கீழே இறங்கி வந்தார்.
ஆனால், பந்தை கையில் எடுத்த மார்க் வூட் கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை நேராக ஸ்டெம்பில் அடித்தார். 99 ரன்கள் இருந்த ஜடேஜா ரன் ஓட துணிவில்லாமல் க்ரீஸை கீழே இறங்காமல் அங்கேயே நின்று கொண்டார். மறுமுனையில், க்ரீஸை விட்டு வெளியேறிய சர்பராஸ் கான் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகினார். அவர் டைவ் அடித்து இருந்தாலும் க்ரீஸை தொட்டு இருக்க முடியாத நிலை இருந்தது. இதனால், அறிமுக ஆட்டத்தில் ரன்-அவுட் ஆன சோகத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். எனினும், அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார்.
சர்பராஸ் கான் ரன்-அவுட் ஆகியதை மைதானத்திற்கு வெளியே டக்-அவுட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா தனது தொப்பியை வீசி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“