நான் நாட்டுக்காக விளையாடுபவன் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவின் டுவிட், அப்போ மத்தவங்க எல்லாம் யாருக்காக விளையாடுகிறார்கள் என்ற கேள்வியை நம்முள் எழுப்பியது மட்டுமல்லாமல், இந்திய அணிக்குள் பிளவு இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி, அரையிறுதி போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து நடையை கட்டியது. சில நாட்களிலேயே, இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் ஊடகங்களில் பரவின.
ரோகித் தந்த யோசனைகளை கோலி கேட்கவில்லை, அணியில் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும், ரோகித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியானது. இதனால், கோலி - ரோகித் மோதல் உச்சக் கட்டத்தை எட்டியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த கோலி, ரோகித் சர்மாவுடன் எந்த பிரச்னையும் இல்லை. . இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் யார் பயனடைகிறார்கள் என தெரியவில்லை என்று கூறினார். ஆனால், அணி வீரர்களுடன் கோலி செல்பி எடுத்த போது அதில் ரோகித் சர்மா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் நாட்டுக்காக விளையாடுபவன் : இந்நிலையில், ரோகித் சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, இணையத்தில் வைரலாகி உள்ளது. ஒவ்வொரு முறை வெளிவரும் போதும் அணிக்காக வருவதில்லை, நாட்டிற்காக தான் வருகிறேன் என்பது போல் ஒரு டுவிட் செய்துள்ளார். இந்த செய்தி யாருக்காக? இதுபோன்று குறிப்புடன் யாருக்காக அவர் பதிவு செய்துள்ளார் என்று அவருக்கு மட்டுமே வெளிச்சம் . மேலும் இது மறைமுகமாக அணியில் யாரும் எனக்கு பெரியவர்கள் இல்லை, நான் நாட்டுக்காக ஆடுபவன் என்பதை குறிக்க இவ்வாறு பதிவிட்டுள்ளரா என்று ரசிகர்கள் தலையை பிய்த்து வருகின்றனர்.