Advertisment

சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ரோஹித் சர்மா தான் கேப்டன் – ஜெய் ஷா உறுதி

ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார்; சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவார்; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை வெல்வார் – ஜெய் ஷா நம்பிக்கை

author-image
WebDesk
New Update
jay shah and rohit

பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வதை உறுதி செய்த பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா, வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மூன்றாவது ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

"ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வோம் என்று நான் நம்புகிறேன்" என்று பி.சி.சி.ஐ பகிர்ந்த வீடியோவில் ஜெய் ஷா கூறியுள்ளார்.

ரோஹித்தின் தலைமையின் கீழ், பார்படாஸில் கடந்த வாரம் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்தியா 11 ஆண்டுகால ஐ.சி.சி பட்டத்தின் வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. 2007 ஆம் ஆண்டு தொடக்கப் பதிப்பிற்குப் பிறகு இது இந்தியாவின் இரண்டாவது டி20 உலகக் கோப்பை பட்டமாகும்.

இந்திய அணி முன்பு ரோஹித்தின் தலைமையின் கீழ் இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளது. அவை ஒருநாள் (ODI) உலகக் கோப்பை மற்றும் ஐ.ஐ.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி. கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

டி20 உலகக் கோப்பை வெற்றியை, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த ரோஹித், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவருக்கும் ஜெய் ஷா அர்ப்பணித்தார்.

“இது ஒரு வருடத்திற்குள் எங்களின் மூன்றாவது இறுதிப் போட்டி. கடந்த ஆண்டு ஜூன் 11 அன்று, நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றோம். நவம்பர் 19 அன்று 10 போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, நாங்கள் இதயங்களை வென்றோம், ஆனால் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்கோட்டில் நான் கூறியது போல், ரோஹித்தின் தலைமையில் இந்தியா இதயங்களையும் உலகக் கோப்பையையும் வென்றது,” என்று ஜெய் ஷா கூறினார்.

இறுதிப் போட்டியின் கடைசி ஐந்து ஓவர்களில் இந்தியா வலுவான மறுபிரவேசத்தை மேற்கொள்ள உதவிய சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் சிறந்த முயற்சிகளையும் ஜெய் ஷா பாராட்டினார்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியாவின் பங்கேற்பை ஜெய் ஷா உறுதி செய்திருந்தாலும், ரோஹித்தின் தரப்பு அண்டை நாட்டிற்குச் செல்லுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில், இந்தியா தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் இருப்பதால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டு வருட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் லீக் கட்டத்தில், வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என இந்தியா மேலும் மூன்று டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Rohit Sharma Jay Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment