ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இது ஐசிசி நடத்திய தொடரில் ரோகித் சர்மா தலைமை தாங்கிய இந்திய அணி பெறும் 2வது பெரிய தோல்வியாகும்.
Advertisment
முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியுற்றது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை கேள்வியெழுப்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை ஹர்டிக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். அதனால், டெஸ்ட் அணி கேப்டன் பதவி குறித்தும் பிசிசிஐயின் தேர்வுக் குழு இந்த ஆண்டு முக்கிய முடிவை எடுக்கும் என்று நம்பப்படுகிறது.
2023 - 25 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை முன்னிட்டு, அடுத்த சுழற்சியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்தினாலும், அவர் தனது பேட்டிங்கில் சோபிக்க தவறும் பட்சத்தில் தேர்வுக் குழு அந்த முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.
"ரோகித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பது ஆதாரமற்ற விஷயங்கள். எனினும், 2025 ஆம் ஆண்டில் 3வது பதிப்பு முடிவடையும் போது அவருக்கு கிட்டத்தட்ட 38 வயது இருக்கும் என்பதால், இரண்டு வருட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி முழுவதையும் அவர் நீடிப்பாரா என்பது ஒரு பெரிய கேள்வி எழுகிறது. இப்போதைக்கு, சிவசுந்தர் தாஸும் அவரது சகாக்களும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு அவரது பேட்டிங் ஃபார்மைப் பார்த்து முடிவு எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது. டிசம்பர் இறுதி வரை எங்களுக்கு டெஸ்ட் இல்லை. எனவே தேர்வாளர்கள் ஆலோசித்து முடிவெடுக்க போதுமான அவகாசம் உள்ளது. அதற்குள் ஐந்தாவது தேர்வாளரும் (புதிய தலைவர்) குழுவில் இணைவார். எனவே, ஒரு முடிவு எடுக்கப்படலாம்." என்று பிசிசிஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
2022 ஜனவரியில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு ரோகித் தயக்கம் காட்டினார் என்றும், முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கேஎல் ராகுல் மீது விருப்பம் இல்லாததால் அந்த பதவியை ஏற்க அவரை வற்புறுத்தியவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
"தென் ஆப்பிரிக்காவில் கேஎல் ராகுல் ஒரு கேப்டனாக ஈர்க்கத் தவறியவுடன், அந்த நேரத்தில் இரண்டு முக்கியமானவர்கள் (முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா) அவரை அந்த ரோலை ஏற்கும்படி சமாதானப்படுத்த வேண்டியிருந்தது" என்று அந்த பி.சி.சி.ஐ அதிகாரி கூறியுள்ளார்.
ரோகித் சர்மா இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் 3 போட்டிகளை தவற விட்டார் (இங்கிலாந்தில் ஒன்று மற்றும் வங்க தேசத்தில் இரண்டு). அந்த 7 போட்டிகளில், அவர் 35.45 சராசரியில் 390 ரன்கள் எடுத்துள்ளார். நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 120 ரன்கள் எடுத்தது அவரது ஒரே தனித்துவமான ஆட்டமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil