என்னடா இது-ன்னு முழிக்க வேண்டாம்... சிங்கள மொழியில் 'எனது பெயர்' ரோஹித் ஷர்மா என்று அர்த்தமாம்!
இலங்கையின் 70வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் விதமாக நடந்து வரும் 'நிடாஹஸ்' முத்தரப்பு டி20 தொடர், ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், சோகம் என்னவெனில், 1998ல் நடந்த 50வது ஆண்டு நிடாஹஸ் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற இலங்கை அணி, தற்போது இறுதிப் போட்டிக்கே முன்னேற முடியாமல் போயுள்ளது!. நேற்று நடந்த 'நாகினி' ஆட்ட கிரிக்கெட்டில், வங்கதேசம் த்ரில் வெற்றிப் பெற்றது. நாளை(மார்ச் 18) இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது வங்கதேசம். கொஞ்சம் அசந்தால், நம்மையும் பாம்பு போட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, இலங்கை அணியின் வெறித்தனமான இரு ரசிகர்களிடம் இருந்து சிங்கள மொழி கற்கும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் இருவரும், மாறி மாறி ரோஹித்துக்கு அவர்கள் மொழியை கற்றுக் கொடுக்க, 'யப்பா ரொம்ப கஷ்டமா இருக்குப்பா!' என ரோஹித் ஜகா வாங்க, கலகலப்பாக செல்கிறது அந்த உரையாடல்.