2002 உலககோப்பை கால்பந்து வெற்றியாளரும், பார்சிலோனா அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான ரொனால்டினொ, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பராகுவே சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம், அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
2002-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில், பிரேசில் அணி சாம்பியனாக முக்கிய காரணமாக இருந்த ரெனால்டினோ. பிரேசில் அணிக்காக மட்டுமல்ல, ஏ.சி.மிலன், பார்சிலோனா போன்ற புகழ்பெற்ற கால்பந்து கிளப்புகளுக்காக விளையாடி, ரொனால்டினோ கோடி கோடியாக பணத்தைச் சம்பாதித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு அனைத்துவிதமான கால்பந்துப் போட்டிகளில் இருந்தும் ரொனால்டினோ ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்குப் பிறகும், உலகம் முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, பராகுவே சென்ற கால்பந்து சூப்பர் ஸ்டார் இப்போது சிறையில் அடைப்பட்டு கிடக்கிறார்.
ரொனால்டினோவும் அவரின் சகோதரரும் மேலாளருமான ராபர்ட்டோ ஆஷிஸ் இருவரும், கடந்த வெள்ளிக்கிழமை பராகுவே நாட்டுக்குச் சென்றுள்ளனர். குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்று புத்தகம் ஒன்றை வெளியிடுவதற்காக பராகுவே சென்றவர்கள் தலைநகர் அசக்ஸனில் உள்ள சொகுசு ஹேட்டலில் தங்கியிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ரியோடி ஜெனிரோ திரும்ப அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஹோட்டலுக்கு வந்த பராகுவே போலீஸார் இருவரிடத்திலும் பாஸ்போர்ட் சம்பந்தமாக 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, ரொனால்டினோவின் கையில் கை விலங்கு மாட்டப்பட்டிருந்தது. அதை ஒரு துணியைக் கொண்டு மூடி ரொனால்டினோ மறைத்திருந்தார். அவரின் சகோதரர் கையிலும் கை விலங்கு போடப்பட்டிருந்தது. போலி பாஸ்போர்ட் வழியாக தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக பராகுவே போலீஸ் குற்றம் சாட்டியது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சகோதரர்கள் இருவரையும் விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க நீதிபதி கிளாரா ரவுஸ் டியாஸ் உத்தரவிட்டார். ரொனால்டினோ தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. தான் சமூகத்தில் புகழ்பெற்றவன். எனவே வீட்டுக் காவலில் வைக்கவும் என்று நீதிபதியிடத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து, சிறையில் சகோதரர்கள் இருவரும் வேறுவேறு அறைகளில் மற்ற கைதிகளுடன் சேர்த்து அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் கைதாகி, சிறையில் இருக்கும் பிரேசில் தொழிலதிபர் வில்மான்டேஸ் சூசா என்பவர் இருவருக்கும் போலி பாஸ்போர்ட்களை தயார் செய்து கொடுத்துள்ளார். வில்மான்டேஸ் சூசா கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் போலீஸார் ரொனால்டினோவைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.