உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள வருகிற ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்தாண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று ரூர்கேலாவில் அமையவுள்ள ஒரு புதிய ஹாக்கி ஸ்டேடியத்திற்கு முதல்வர் நவீன் பட்நாயக் அடிக்கல் நாட்டினார். மேலும் அவர், இந்த மைதானம் ஹாக்கி உலகக் கோப்பைக்கான இரண்டாவது முக்கிய மைதானமாகவும் இருக்கும் என்றும் அறிவித்தார். கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்ட நிலையில், அதை உரிய நேரத்தில் முடிப்பது குறித்து அரசு சந்தேகம் கொண்டிருந்தது. ஏற்கனவே, சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நவம்பர் 30-ம் தேதிக்குள் பிரதான கட்டமைப்பை முடித்து புல்தரை அமைக்க அரசுக்கு காலக்கெடுவும் விதித்தது.
இதனால், அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளாக, 1,200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் - அவர்களில் பலர் பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் - இந்த ஸ்டேடியத்தைக் கட்டுவதற்காக மூன்று ஷிப்டுகளில் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். முதல் போட்டிக்கு மூன்று வாரங்களுக்குள், சுமார் 21,000 பேர் அமரும் திறன் கொண்ட பெரிய சாஸர் வடிவ எஃகு அமைப்பு 16 ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ந்து நிற்கிறது.
நாட்டின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமான இந்த கட்டிடத்தை ஜனவரி மாதம் முதல்வர் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்துடன், ஜனவரி 13 முதல் 29 வரை உலகக் கோப்பையை நடத்துகிறது. சுதந்திரப் போராட்ட வீரரும் பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் பெயரிடப்பட்ட இந்த புதிய மைதானத்தில் மொத்தம் 20 போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
ஸ்டேடியம் தளத்தில், தொழிலாளர்கள் பொருட்களை ஒன்றாக இணைக்க 24 மணி நேரமும் உழைக்கிறார்கள். ஸ்டேடியம் பணிகள் ஏற்கனவே முடிவடைந்து, இந்தியா மற்றும் தென் கொரியாவின் ஜூனியர் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிக்கு மைதானம் பயன்படுத்தப்பட்டாலும், அலுமினிய முகப்புகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்களை சரிசெய்வதற்கும் மற்ற கட்டமைப்பு பணிகளை முடிக்க பெரிய கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேறு சில தொழிலாளர்கள் மைதான வளாகத்தில் சாலைகள், புல்வெளிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பிற துணை வேலைகளை முடிக்க நேரத்தை எதிர்த்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த மைதானத்தின் திட்ட மேலாளர் சபரீஷ் கூறுகையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இந்த மைதானத்தை 15 மாதங்களில் கட்டி முடித்தோம். நாங்கள் தொடங்கும் போது, நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான பெரிய மரங்கள் மற்றும் புதர்களைக் கொண்ட ஒரு காடாக இருந்தது. அது இப்போது நாட்டின் மிகப்பெரிய மைதானமாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளுடன் பணிபுரியும் போது நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டோம். பொருட்கள், குறிப்பாக பிலாயில் இருந்து கொண்டு செல்லப்பட்ட இரும்புகள் மற்றும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை புல்வெளிகளை கொண்டு செல்வது ஒரு சவாலாக இருந்தது, ”என்று சபரீஷ் கூறினார்.
பருவமழை பொய்த்ததால் சில மாதங்களாக பணிகள் பாதிக்கப்பட்டன. சுமார் 3,600 டன் கட்டமைப்பு எஃகு மற்றும் 4,000 டன் TMT எஃகு மைதானத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு இருக்கையும் தடையற்ற காட்சியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் உலகின் வேறு எந்த ஹாக்கி ஸ்டேடியத்தையும் விட ஆடுகளத்திற்கு அருகில் இருப்பார்கள் என்று பெயர் வெளியிட விரும்பாத பொறியாளர் ஒருவர் கூறினார்.
ரூர்கேலாவில் மைதானம் கட்டுவதற்கு செலவழிக்கப்பட்ட தொகை குறித்து மாநிலத்தின் பிஜேடி அரசு அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரம் எதையும் தெரிவிக்கவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் துஷார்காந்தி பெஹரா நவம்பர் 24ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் கட்டுவதற்கும், கலிங்கா ஸ்டேடியத்தை மேம்படுத்துவதற்கும் மொத்தம் ரூ.875 கோடி செலவிடப்பட்டுள்ளது. புதிய மைதானம் கட்ட ரூ.500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்ற நகரங்களைப் போலல்லாமல், வீரர்கள் தங்குமிடம், பயிற்சி ஆடுகளம், பிரதான மைதானம், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை அருகிலேயே அமைந்திருப்பதால், போட்டியின் போது ரூர்கேலாவில் அதிகம் பயணிக்க வேண்டியதில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட விமான நிலையமும் மைதானத்தை ஒட்டியே உள்ளது.
எஃகு நகரமான ரூர்கேலாவில் விருந்தோம்பல் துறையில் உள்ள வரம்புகளைக் கருத்தில் கொண்டு, ஒடிசா அரசாங்கம் 225 4-நட்சத்திர வகை அறைகளை உருவாக்கியுள்ளது. அதனை நிர்வகிக்கும் மேலாண்மை போட்டியின் போது தாஜ் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான தங்குமிடங்களை மேம்படுத்த ரூ.84 கோடி செலவிடப்பட்டுள்ளது.
"225 அறைகளில் 150 அறைகளை தாஜ் குழுமத்திடம் ஒப்படைத்துள்ளோம். மீதமுள்ள 75 அறைகள் இம்மாத இறுதிக்குள் தயாராகிவிடும். தங்கும் வசதி ஒரே நேரத்தில் குறைந்தது எட்டு குழுக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். நீச்சல் குளம் மற்றும் வீரர்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடம் ஆகியவை பயன்படுத்த தயாராக உள்ளன,” என்று ரூர்கேலாவில் மைதானம் மற்றும் தங்கும் வசதிகளை மேம்படுத்துவதை மேற்பார்வையிடும் அரசுக்கு சொந்தமான இட்கோவின் நிர்வாக இயக்குனர் பூபேந்திர சிங் பூனியா கூறினார்.
சுந்தர்கர் மாவட்ட நிர்வாகம் நகரத்தில் உள்ள பல்வேறு அரசு விருந்தினர் மாளிகைகளில் 100 அறைகளுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை போட்டியின் போது பயன்படுத்தப்படும். பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பணியாளர் குடியிருப்புகளும் தற்காலிக தங்கும் வசதிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நகரத்தில் சுமார் 1,500 அறைகளுடன் சுமார் 60 சிறிய மற்றும் பெரிய ஹோட்டல்கள் உள்ளன. பார்வையாளர்கள் மற்றும் வீரர்களின் உறவினர்கள் தங்கள் அணிகளைப் பார்க்க வருவார்கள் என்று நிர்வாகம் கூறியது.
ஹாக்கி உலகக் கோப்பைக்கு முன்னதாக ரூர்கேலாவுக்கு ஒரு பெரிய இணைப்பு ஊக்கமாக, பொதுப் பயன்பாட்டுக்காக ரூர்கேலா விமான நிலையத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உரிமம் வழங்கியுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு சொந்தமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) 72 இருக்கைகள் கொண்ட விமானங்களை இயக்க அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரூர்கேலா கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் சுபாங்கர் மொஹபத்ரா, மாநில அரசால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட பட்டய விமானங்கள் மூலம் வீரர்கள் நேரடியாக நகரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றார். "பொது பயன்பாட்டிற்காக, அலையன்ஸ் ஏர் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா வரை வர்த்தக நடவடிக்கைகளை தொடங்க உள்ளது," என்று அவர் கூறினார்.
ரூர்கேலாவிலிருந்து 2.5 மணி நேர பயணத்தில் உள்ள ஜார்சுகுடாவில் உள்ள அருகிலுள்ள விமான நிலையத்திற்கு வரும் விமானப் பயணிகளுக்காக ஒரு ஷட்டில் சேவையைத் தொடங்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
புவனேஸ்வர் தவிர ஒடிசாவின் இரண்டாவது ஸ்மார்ட் நகரமான ரூர்கேலா, பரந்த சாலைகள், புதுப்பிக்கப்பட்ட நடைபாதைகள், வெளிச்சம், மேம்படுத்தப்பட்ட வடிகால், புதுப்பிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் நீரூற்றுகள், தோட்டங்கள் மற்றும் துப்புரவுப் பணிகள் - பாரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. போட்டியின் போது நகர்ப்புற இயக்கத்தை வலுப்படுத்த, மாநில அரசு நகர பேருந்து திட்டத்தின் கீழ் 25 பேருந்துகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
சிசிடிவிகள் பொருத்தப்பட்டதன் மூலம் நகரில் பாதுகாப்பு அமைப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நகரச் சாலைகளில் உள்ள சிற்பங்கள் மற்றும் கலைப் படைப்புகள் நகரின் அழகுக்கு வண்ணம் சேர்க்கின்றன. அதே சமயம் எல்லாச் சுவர்களும் ஹாக்கி ஜாம்பவான்கள், புராண உருவங்கள் மற்றும் புகழ்பெற்ற ஒடியா பிரமுகர்களின் வண்ணமயமான சுவரோவியங்களால் ஜொலிக்கின்றன.
இந்த பணிகள் அனைத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக மகாபத்ரா கூறினார். இருப்பினும், நிகழ்வு முடிந்ததும் அதன் பராமரிப்பு குறித்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். “நிர்வாகம் எடுத்துள்ள பல திட்டங்களால் களத்தில் மாற்றத்தை நாம் காணலாம். ஆனால், உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தத் திட்டங்களைப் பராமரிப்பது சவாலாக இருக்கும்,” என்று அந்த நகரத்தைச் சேர்ந்த அரபிந்த பத்ரா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.