RCB vs GT Score Updates, IPL 2023: கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கடைசிப் போட்டியில் பெங்களூரு அணி, புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த குஜராத் அணியை இன்று (மே 21) எதிர்கொண்டது.
இதையும் படியுங்கள்: மும்பை, ஆர்.சி.பி இன்று தோற்றால் ராஜஸ்தான் அணிக்கும் வாய்ப்பு இருக்கு: ஐ.பி.எல் பிளே ஆஃப் லேட்டஸ்ட் நிலவரம்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழைக் காரணமாக இந்தப் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டூ பிளசிஸ் களமிறங்கினார். இருவரும் பவர் ப்ளே ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். பெங்களூரு அணி 67 ரன்கள் எடுத்திருந்தப்போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. டூ பிளசிஸ் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 11 ரன்களில் ரஷித் கான் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய லோம்ரோர் ஒரு ரன்னில் வெளியேற, பெங்களூரு 85 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்ததாக பிரேஸ்வெல் களமிறங்கி பவுண்டரிகளாக விளாசினார். இதற்கிடையில் மறுமுனையில் ஆடிவந்த கோலி அரை சதம் அடித்தார். பிரேஸ்வெல் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்திலே டக் அவுட் ஆனார். அடுத்ததாக அனுஜ் களமிறங்கி கம்பெனி கொடுக்க, கோலி பவுண்டரிகளாக விளாசி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடி கோலி சதம் அடித்து அசத்தினார்.
இந்தநிலையில் பெங்களூரு அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. கோலி 61 பந்துகளில் 101 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் ஒரு சிக்சர் மற்றும் 13 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் ஆடிய 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் பந்துவீச்சில் நூர் அகமது 2 விக்கெட்களையும், ஷமி, தயாள், ரஷித் கான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
குஜராத் பேட்டிங்
குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹா மற்றும் கில் களமிறங்கினர். கில் அதிரடியாக ஆட சாஹா நிதானமாக விளையாடினார். அணியின் எண்ணிக்கை 25 ஆக இருந்தப்போது சாஹா 12 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக விஜய் சங்கர் களமிறங்கினார். கில் – விஜய் சங்கர் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் குவித்தது. சிறப்பாக விளையாடிய கில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பெங்களூரு பவுலர்கள் திணறினர். சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் அரை சதம் அடித்தார். அணியின் எண்ணிக்கை 148 ஆக இருந்தப்போது விஜய் சங்கர் அவுட் ஆனார். அவர் 35 பந்தில் 53 ரன்கள் அடித்தார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்ததாக ஷனகா களமிறங்கிய நிலையில் குஜராத் வெற்றிக்கு 5 ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட்டது. இந்தநிலையில், ஷனகா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மில்லர் 6 ரன்களில் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திவேதியா கம்பெனி கொடுக்க, கில் 3 சிக்சர்கள் விளாசினார். இந்த நிலையில் கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் நோபால் மற்றும் வைடு உடன் கிடைத்த ஃப்ரீ ஹிட்டில் கில் சிக்சர் அடித்து, அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
குஜராத் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சிறப்பாக விளையாடிய கில் 52 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். பெங்களூரு தரப்பில் சிராஜ் 2 விக்கெட்களையும், வைசாக் மற்றும் ஹர்ஷல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்தத் தோல்வியால் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் விவரம்
பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்சல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்
குஜராத்: ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி, யாஷ் தயாள்
இந்த ஐ.பி.எல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 14 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
குஜராத் அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என அனைத்து அம்சங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேநேரம் பெங்களூரு அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பவுலிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.