/indian-express-tamil/media/media_files/2025/05/01/l60HwXWNnBFbcXbLnzR1.jpg)
ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல், 50-வது லீக் போட்டி, சவாய் மான்சிங் ஸ்டேடியம் ஜெய்ப்பூர்.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, RR vs MI LIVE Cricket Score
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரிக்கல்டன் – ரோஹித் இருவரும் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போக போக அதிரடியில் இறங்கிய இருவரும் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் மளமள வென உயந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய இவர்கள, அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு, 12 ஓவர்களில், 116 ரன்கள் சேர்த்தபோது ரிக்கல்டன் ஆட்டமிழந்தார். 38 பந்துகளை சந்தித்த அவர், 7 பவுண்டரி 3 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், அதிரடியில் அசத்த, மறுமனையில் அரைசதம் கடந்த ரோகித் சர்மா 36 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன், 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் 123 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணிக்கு 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சூர்யகுமார் – ஹர்திக் ஜோடி அதிரடி இன்னிங்சை கொடுத்தது.
இவர்களை பிரிக்க ராஜஸ்தான் அணி மேற்கொண்ட முயற்சிக்கு கடைசிவரை பலன் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்து அசத்தினர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கில், மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. 23 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ், 4 பவுண்டரி 3 சிக்சருடன் 48 ரன்களும், 23 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில், தீக்ஷனா, பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய வைபவ் சூரியவன்ஷி இந்த முறை 2 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே பெவிலியன் திரும்பினார், அதன்பிறகு வந்த ராணா 9 ரன்களும், பராக் 16 ரன்களும், ஜூரேல் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சிரம்ரன் ஹெட்மயர் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
ஷூபம் டூபி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், கடைசி கட்டத்தில் நிதானமாக விளையாடிய ஆர்ச்சர், 27 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 16.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு சுருண்டது. இதனால் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மும்பை அணி தரப்பில், கரண் சர்மா, போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், ஹர்த்க், தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 11 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த மும்பை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் இதுவரை 31 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 15 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும், 16 போட்டிகளில் மும்பை அணியும் வென்றுள்ளன. ஏப்ரல் 22-ல் நடந்த சமீபத்திய போட்டியில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.