18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. நேரம் செல்ல செல்ல ஜெய்ஸ்வால் சிறிது அதிரடி காட்டினார். இதனால் பவர்பிளே ஆன முதல் 6 ஓவர்களில் ராஜஸ்தான் 45 ரன்கள் அடித்தது.
பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே (7-வது ஓவர்) சஞ்சு சாம்சன் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ஜெய்ஸ்வாலுடன் ரியான் பராக் கை கோர்த்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர். நிதானமாக விளையாடிய ரியான் பராக் 30 ரன்களில் அவுட்டானார். இதனிடையே ஜெய்ஸ்வால் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அரைசதம் கடந்த பிறகும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 75 ரன்களில் (47 பந்து) ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் துருவ் ஜுரெல் (35 ரன்கள்) அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் வலுவான நிலையை எட்ட உதவினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்துள்ளது. பெங்களூரு தரப்பில் ஹேசல்வுட், குருனால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்கியது.
ஆர்.சி.பி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி - பில் சால்ட் இருவரும் அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பில் சால்ட் 65 ரன்களில் (33 பந்துகள்) ஆட்டமிழந்தார். விராட் கோலி மற்றும் பில் சால்ட் அரைசதம் அடித்து அசத்தினர். இருவரும் மேற்கொண்டு விழாமல் பார்த்து கொண்டதுடன் பெங்களூரு அணியையும் வெற்றி பெற வைத்தனர். முடிவில், 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி. அதிகபட்சமாக பிலிஃப் சால்ட்- 65, விராட் கோலி- 62, தேவ்தட் படிக்கல்- 40 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடர்ல் 4வது வெற்றி பதிவு செய்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.!