லோதா கமிட்டி பரிந்துரையின்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் பல சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது, 2 முறை பதவி வகித்தால் அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் பதவிக்கு வர முடியும், ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு பதவி வகிக்கக்கூடாது ஆகியவை லோதா கமிட்டி சிபாரிசுகளில் முக்கியமானதாகும்.
இந்த புதிய விதிமுறைகளின்படி தான் மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 23-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிர்வாகிகள் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.
Valid nominations for the election of office-bearers and apex council members ▶️https://t.co/uUnsTJvufw pic.twitter.com/H1Ro03Aj7s
— TNCA (@TNCACricket) September 25, 2019
அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தனது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.45 மணிக்கு நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் என்.சீனிவாசனின் மகள் ஆவார்.
Smt. Rupa Gurunath elected President of TNCA in 87th Annual General Meeting
For More▶️ https://t.co/D3K4H5FYeR pic.twitter.com/TNcxvDW9nO
— TNCA (@TNCACricket) September 26, 2019
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழு நேர இயக்குனரான ரூபா குருநாத் சென்னையில் உள்ள கிராண்ட்ஸ்லாம் கிரிக்கெட் கிளப்பின் செயலாளராகவும் உள்ளார்.
டி.ஜெ.சீனிவாசராஜ் (நகரம்), டாக்டர் பி.அசோக் சிகாமணி (மாவட்டம்) ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஆர்.எஸ். ராமசாமி செயலாளராகவும், கே.ஏ.சங்கர் இணை செயலாளர் பதவிக்கும், என்.வெங்கடராமன் உதவி செயலாளராகவும் ஜெ.பார்த்தசாரதி பொருளாளராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
வி.கருணாகரன், பி.எஸ்.அரவிந்த், எம்.கே.ஸ்ரீவத்சா, என்.விஜய் நிர்மல்குமார், எஸ்.பிரபு, அஜய்குமார் சந்தோக் (6 பேரும் நகரம்), சண்முகம் கவுதமன், கே.எஸ். சீனிவாசன், ஆர்.திவ்யபிரகாசம் ஆகியோர் செயற்குழு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
மாநில கிரிக்கெட் சங்கங்களில் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்பது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ரூபா கணவர் தான் ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றிருக்கும் குருநாத் மெய்யப்பன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வெளியான டிஎன்பிஎல் சூதாட்டம் உள்ளிட்ட பல சவால்களை புதிய தலைவரான ரூபா குருநாத் எதிர்கொள்ள காத்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.