IPL 2024 | Chennai Super Kings | Ms Dhoni | Ruturaj Gaikwad: 17-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கேப்டன் ருதுராஜ்
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணியின் நீண்ட கால கேப்டனாக இருந்த தோனி தனது பொறுப்பை சிஷ்யனும், அணியின் நட்சத்திர வீரருமான ருதுராஜிடம் ஒப்படைத்துள்ளார். புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருதுராஜூக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டாடா ஐ.பி.எல் 2024 தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்துள்ளார் தோனி. ருதுராஜ் 2019 முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய வீரராக இருந்து வருகிறார், மேலும் இந்த காலகட்டத்தில் ஐ.பி.எல்-லில் 52 போட்டிகளில் விளையாடியுள்ளார். அணி வரும் சீசனை எதிர்நோக்குகிறது." என்று தெரிவித்துள்ளது.
2020 ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட், ஒரே அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 52 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 39.07 சராசரியிலும் 135.52 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 1797 ரன்களை குவித்துள்ளார். 2021 சீசனில் ருத்தரதாண்டவம் ஆடிய ருது 16 போட்டிகளில் 45.35 என்ற அற்புதமான சராசரியில் 635 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வாகை சூடினார்.
சி.எஸ்.கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், "கேப்டன்கள் சந்திப்புக்கு முன்புதான் நானே இந்த முடிவை அறிந்தேன். நீங்கள் அவரது முடிவை மதிக்க வேண்டும், அது அவரது அழைப்பு - தோனி என்ன செய்தாலும் அது அணியின் நலனுக்காக" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“