Ruturaj Gaikwad - India A vs New Zealand A, 3rd unofficial Test Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து ஏ அணி அதிகாரபூர்வமற்ற 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில், பெங்களுருவில் நடந்த முதலாவது மற்றும் ஹூப்ளியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. தற்போது தொடரின் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களுருவில் நடைபெற்று வருகிறது.
நேற்று முதல் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரியங் பஞ்சல் தலைமயிலான இந்திய ஏ அணி 86.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 293 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 107 ரன்கள் எடுத்தார். அவருடன் சிறப்பான பாரட்னர்ஷிப் அமைத்த உபேந்திரா யாதவ் 76 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து ஏ அணியில் மேத்யூ பிஷர் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். இன்று 2-வது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை விளையாடி வரும் நியூசிலாந்து ஏ அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்களை எடுத்துள்ளது.
சதமடித்து மிரட்டிய ருதுராஜ்
இந்த ஆட்டத்தில் கேப்டன் பிரியங் பஞ்சல் விக்கெட்டுக்கு பிறகு களமாடிய ருதுராஜ் கெய்க்வாட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், உபேந்திரா யாதவுடன் சிறப்பான பாரட்னர்ஷிப் அமைத்த அவர் சதம் விளாசினார். தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 127 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் என மிரட்டில் அடி அடித்து 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2021 ஆம் ஆண்டில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான (635 ரன்கள்) ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தி இருந்தார். இதன்பிறகு, அவர் கடந்தாண்டு இறுதியில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் ருதுராஜ் 5 போட்டிகளில் 4 சதம் விளாசி அசைக்க முடியாத ஃபார்மில் இருந்தார். ஆனால், இந்தாண்டுக்கான சென்னை சூப்பர் அணியில் தொடக்க வீரராக விளையாடி இருந்த ருதுராஜ் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
சில ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் பழைய ருதுராஜை பார்க்க இயலாமல் போனது. இந்திய டி-20 அணியில் வாய்ப்புகள் வழங்கப்படும் அவர் அதை சரியாக பயன்படுத்தவில்லை. இந்த நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்து மிரட்டியுள்ளார். தற்போது அவரின் புகைப்படத்தை சென்னை அணி அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள். மேலும், ருதுராஜின் அதிரடி ஆட்டம் மென்மேலும் தொடர வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil