2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியின்போது ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சண்டிலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதோடு மட்டுமில்லாமல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதித்தது.
இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது. ஆனால், ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.
தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை எதிர்த்தும் ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்த வழக்கில், ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்து கேரள உயர்நீதிமன்றத்தின் பெஞ்ச் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆயுட்கால தடையை நீக்க கோரி கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக ஸ்ரீசாந்த் சமீபத்தில் அறிவித்தார்.
அதோடு ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட விவகாரத்தில் 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் கிரிக்கெட் வாரியம் தனக்கு எதிராக மட்டுமே ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக இருந்த ராகுல் டிராவிட் என்னை பற்றி நன்கு அறிந்தவர். அப்படி இருந்தும் அவர் எனக்கு ஆதரவு தரவில்லை. தோனிக்கு உணர்வுப்பூர்வமாக தகவல் அனுப்பி இருந்தேன். அதற்கும் அவர் பதில் அனுப்பவில்லை.
டெல்லி போலீசார் 16 அல்லது டாப் 10 இந்திய வீரர்கள் மீது குற்றம்சாட்டி இருந்தனர். இதில் 6 பேர் பெயர் வெளியாகி இருந்ததால் கூட, கிரிக்கெட் விளையாட்டை அது உண்மையாக பாதித்து இருக்கும்.
பி.சி.சி.ஐ. தேசிய நிர்வாகம் அல்ல. தனியார் நிறுவனம். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விளையாடுவேன். விளையாட அனுமதிக்காவிட்டால் வேறு நாட்டுக்காக ஆடுவேன் eஎன்றார்.
இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் முகமது அசாருதீன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "இந்தியாவின் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர். அவருக்கான இந்திய அணியின் கதவுகள் இன்னும் மூடப்படவில்லை. ஆனால், ஸ்ரீசாந்த் தற்போது கொஞ்சம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல், தனது நம்பிக்கையை அவர் இழந்து விடக் கூடாது. நிச்சயம், மீண்டும் அவருக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புக் கிடைக்கும்" என்றார்.