T20 World Cup Tamil News: 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியது. நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டது. இதனால், புள்ளிப் பட்டியலில் இந்தியா அதே நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான்
நடப்பு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியுற்றது. நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி அதன் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றில் இந்தியா உள்ள அதே குழு -2ல் இடம்பிடித்துள்ள நிலையில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்திற்கு, பரம எதிரியான இந்தியாவை உற்சாகப்படுத்தும் அசாதாரண நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. ஆனால், இந்தியாவின் தோல்வி பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை வெகுவாகக் குறைத்துள்ளது. இதனால், அந்த அணியினர் இப்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்க தேசம் ஆகிய இரண்டையும் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி அதன் அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோல்வி அடைய வேண்டும். அல்லது இந்தியா எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது தோற்க வேண்டும். பாகிஸ்தானின் நெட் ரன்ரேட் (+0.765) தற்போது வரை, இந்தியாவின் நெட் ரன்ரேட்டை (+0.844) ஒட்டியுள்ளது. எனவே, அந்த அணி எதிர்வரும் இரண்டு ஆட்டங்களிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவதுதான் அவர்களின் ஒரே நம்பிக்கை.
மறுபுறம், பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவை நெருங்க முடியா நிலையில் உள்ளது. இந்தியாவை வீழ்த்திய தென்ஆப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே, ஜிம்பாப்வேக்கு எதிரான கைவிடப்பட்ட போட்டியில் அந்த அணிக்கு கூடுதல் புள்ளி கிடைத்தது. இதனால், பாகிஸ்தான் அவர்களை வீழ்த்தினாலும் தென்ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு ஏற்படாது.
Undefeated South Africa go on top of the Group 2 table 🌟#T20WorldCup Standings 👉 https://t.co/TIZ6Sk3coG pic.twitter.com/LaqVN42rBT
— T20 World Cup (@T20WorldCup) October 30, 2022
இந்தியா

இந்தியாவுக்கு வங்க தேசம் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 2 போட்டிகள் உள்ளன. அந்த இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிச் செய்தால் இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். அப்படி, அந்த இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா தோற்கும் நிலை ஏற்பட்டாலும், இந்தியாவின் நெட் ரன்ரேட் அடி வாங்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்தியா அதன் அரையிறுதி வாய்ப்புக்காக மற்ற அணிகளின் முடிவுகளுக்காகவும், நெட் ரன்ரேட் கணக்கீடுகளுக்காகவும் காத்திருக்கும் நிலை ஏற்படும். எனினும், இந்தியாவின் தலைவிதி இன்னும் அவர்களின் கைகளில் உறுதியாக உள்ளது.
தென் ஆப்பிரிக்கா

வங்க தேச அணியை 100 ரன் வித்தியாசத்திலும், இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் நெட் ரன் ரேட் +2.772 ஆகவும், 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள அந்த அணி பாகிஸ்தான் அல்லது நெதர்லாந்துக்கு எதிராக ஒரு வெற்றியைப் பதிவு செய்யும் பட்சத்தில், தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு மேலும் உறுதியாகிவிடும்.
பங்களாதேஷ்

வங்க தேச அணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் 2 ஆட்டங்கள் உள்ளன. அந்த அணி அரையிறுதி போட்டியில் நீடிக்க குறைந்தபட்சம் இந்த இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இரண்டையும் வென்றால், அந்த அணியினர் நிச்சயமாக அரையிறுதிக்குள் நுழைவார்கள்.
ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே அணி வருகிற புதன்கிழமை அடிலெய்டில் நடக்கும் ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடிக்க வேண்டும். மேலும், அரையிறுதி வாய்ப்பைப் பெற அடுத்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவையும் வெல்ல வேண்டும்.
நெதர்லாந்து

நெதர்லாந்து அணி தொடர்ந்து மூன்று தோல்விகளைப் பெற்றுள்ள நிலையில், அந்த அணி அரையிறுதி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil