Advertisment

நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

இதுவரை நடைபெற்றுள்ள நான்கு ஒருநாள் போட்டிகளில், தென்னாப்பிரிக்கா பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நேற்று நடந்த நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

Advertisment

ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் 5 ரன்களில் வெளியேற, தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷிகர் தவான் சதம் விளாசி அசத்தினார். 109 ரன்களில் தவான் அவுட்டாக, கேப்டன் விராட் கோலி 75 ரன்கள் எடுத்தார். இவர்களைத் தவிர தோனி மட்டும் 42 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 290 ரன்களை இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரமும்  ஆம்லாவும் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது, மார்க்ரம் 22 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.

அதன்பின், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. தென்னாப்பரிக்காவுக்கு 28 ஓவர்களில் 202 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அவரை தொடர்ந்து களமிறங்கிய டுமினியை குல்தீப் 10 ரன்களில் அவுட்டாக்கினார். அதன்பின் டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 77 ஆக இருக்கும்போது ஆம்லாவை 33 ரன்களில் குல்தீப் அவுட்டாக்கினார்.

அதன்பின் களமிறங்கிய டேவிட் மில்லரும், டி வில்லியர்சும் சேர்ந்து சிக்சர், பவுண்டரியாக விளாசினர். அணியின் எண்ணிக்கை 102 ஆக இருக்கும்போது டி வில்லியர்ஸ் பாண்ட்யாவிடம் அவுட்டானார். அவரை தொடர்ந்து விக்கெட் கீப்பர் கிளாசன் இறங்கினார்.

அதிரடியாக ஆடிய டேவிட் மில்லரை வீழ்த்த இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. சாஹல் வீசிய பந்தை மில்லர் தூக்கியடிக்க, எல்லை கோட்டின் அருகில் நின்ற ஷ்ரேயஸ் ஐயர் தவறவிட்டார். இதேபோல், சாஹல் பந்து வீச்சில் மில்லர் கிளீன் போல்டானார். ஆனால் அது நோ பால் என தெரிய வந்ததால் மில்லர் தப்பினார்.

இதையடுத்து, ஸ்கோர் 174 ரன்னாக இருக்கும்போது டேவிட் மில்லர் சாஹல் பந்துவீச்சில் எல் பி டபிள்யு ஆனார். அவர் 28 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து பெலுக்வாயோ களமிறங்கினார். அப்போது தென்னாப்பிரிக்கா 26 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது.

ஒருபுறம் கிளாசன் அதிரடியாக ஆட, பெலுக்வாயோவும் அடித்து ஆடினார். இருவரும் சேர்ந்து கடைசி 11 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. அந்த அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கிளாசன் 27 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 42 ரன்களுடனும், பெலுக்வாயோ 5 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், பும்ரா, பாண்ட்யா, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதுவரை நடைபெற்றுள்ள நான்கு ஒருநாள் போட்டிகளில், தென்னாப்பிரிக்கா பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும். காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத டி வில்லியர்ஸ் இந்தப் போட்டியில் திரும்பியிருந்த நிலையில், அந்த அணி தனது முதல் வெற்றியை அதிரடியாக பதிவு செய்துள்ளது.

ஐந்தாவது ஒருநாள் போட்டி வரும் 13ம் தேதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறுகிறது.

Virat Kohli Ab De Villiers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment