11-வது புரோ கபடி லீக் (பி.கே.எல் 2024) தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (ஆக.16,17) மும்பையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற நிலையில், ஏலத்தில் களமாடிய 12 அணிகள் ரூ.33.7 கோடியை செலவு செய்து 118 வீரர்களை வாங்கினர்.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 2.15 கோடிக்கு தமிழ் தலைவாஸ் அணி முன்னணி வீரர் சச்சின் தன்வாரை வாங்கியது. அடுத்ததாக ஈரான் வீரர் முகமதுரேசா ஷட்லூயி சியானேனை 2.07 கோடிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வாங்கியது. மேலும், 6 வீரர்கள் தலா ரூ. 1 கோடிக்கு வாங்கப்பட்டனர். மொத்தமாக 8 வீரர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்டனர்.
இப்போது அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை இணைத்து சிறப்பான அணியாக கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் புரோ கபடி லீக் தொடருக்கு முன்னதாக போட்டியில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பர்தீப் நர்வால்
பர்தீப் நர்வால் புரோ கபடியில் 170 போட்டிகளில் 1690 ரெய்டு புள்ளிகளுடன் டாப் ரெய்டராக உள்ளார். இந்த லீக்கில் ஒரு போட்டிக்கு சராசரியாக 10 ரெய்டு புள்ளிகளுக்கு மேல் என 1000 புள்ளி மதிப்பெண்களை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை ‘டுப்கி கிங்’ பர்தீப் நர்வால் பெற்றுள்ளார். எனவே, இந்த சீசனிலும் அவர் மற்றொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபாசல் அட்ராச்சலி
அண்மையில் நடந்த ஏலத்தில் பெங்கால் வாரியர்ஸால் 50 லட்ச ரூபாய்க்கு ஃபாசல் அட்ராச்சலி எடுக்கப்பட்டார். பி.கே.எல் வரலாற்றில் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவராக ஃபேசல் அட்ராச்சலி இருந்து வருகிறார். உண்மையில், லெஃப்ட் கார்னரில் மொத்தமாக 486 டிஃபென்ஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதுதான் இந்த லீக்கில் ஒரு டிஃபென்டரின் அதிகபட்சம் ஆகும். சீசன் 2-ல் யு மும்பா மற்றும் சீசன் 4-ல் பாட்னா பைரேட்ஸ் ஆகிய இரண்டு பட்டங்களை வென்ற அணிகளில் அவர் ஒரு முக்கிய வீரராக இருந்தார்.
சச்சின் தன்வார்
இந்த சீசனில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர், டைனமிக் ரைடர் சச்சின் தன்வார். அவரை தமிழ் தலைவாஸால் அணி 2.15 கோடிக்கு வசப்படுத்தியது. தன்வாரின் விதிவிலக்கான ரெய்டிங் திறமை மற்றும் நிலையான செயல்பாடுகள் அவரை இந்த ஆண்டு ஏலத்தில் அதிகம் தேடப்பட்ட வீரராக மாற்றியது. அவர் வாங்கப்பட்ட தொகை பிகேஎல் வரலாற்றில் இரண்டாவது மிக உயர்ந்ததாக இருக்கிறது. இது வரவிருக்கும் சீசனுக்கான தலைவாஸின் உத்திக்கு அவரது முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“