கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்கள் எல்லிஸ் பெர்ரி, அன்னாபெல், சுதர்லேன்ட் பந்துவீச பேட்டிங் செய்யும் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பலர் பாதிக்கப்பட்டனர். பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் காட்டுத் தீயில் எரிந்த நிலையில் மில்லியன் கணக்கில் காட்டு விலங்குகளும் உயிரிழந்தன இந்த நிலையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்கான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், ரிக்கி பாண்ட்டிங் தலைமையிலான லெவன் மற்றும் கில்கிறிஸ்ட் தலைமையிலான லெவன் அணிகளுக்கு இடையே தலா 10 ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் ரிக்கி பாண்ட்டிங் அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் அச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக இருந்தார்.
இதனிடையே, போட்டியின்போது, காட்சிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடினால் அதிக அளவில் நிதி திரட்ட முடியும் என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த எல்லீஸ் பெர்ரி சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட சச்சின் டெண்டுல்கர் மருத்துவரின் அறிவுரையையும் மீறி ஒரு ஓவர் மட்டும் விளையாடுவதாக ஒப்புக்கொண்டு பேட்டிங் செய்தார்.
சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி, (அன்னாபெல் சுதர்லேண்டின் இரண்டு பந்துகள் உள்பட) பந்துவிச பேட்டிங் செய்தார். சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிரிக்கெட் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர் மஞ்சள் நிற சீருடையுடன் ரசிகர்களின் கைத்தட்டல் ஆரவாரத்துடன் எப்படி ஒவ்வொரு பந்தையும் விளையாடுகிறார் என்று பார்ப்போம்.
Sachin is off the mark with a boundary!https://t.co/HgP8Vhnk9s #BigAppeal pic.twitter.com/4ZJNQoQ1iQ
— cricket.com.au (@cricketcomau) February 9, 2020
முதல் பந்து: எல்லீஸ் பெர்ரி வேகமாக ஓடிவந்து ஒரு ஷார்ட் லெந்த் பந்து வீசுகிறார். இடுப்புக்கு மேலே வந்த பந்தை டெண்டுல்கர் அதை லெக் சைடில் அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார்.
இரண்டாவது பந்து: இந்த பந்தை எல்லீஸ் பெர்ரி லெக் சைடில் வீசுகிறார். டெண்டுல்கர் டீப் ஸ்கொயரில் அடிக்கிறார்.
மூன்றாவது பந்து: மீண்டும் லெக்சைடில் வீசப்பட்ட பந்தை டெண்டுல்கர் ஷார்ட் ஃபைன் லெக்கில் தாமதமாக விளையாடுகிறார். அந்த பந்து ஃபீல்டரால் தடுக்கப்படுகிறது.
நான்காவது பந்து: மீண்டும் ஒரு லெந்த் டெலிவரி பந்து அதை டெண்டுல்கர் கட் ஷாட்டாக அடித்தார். ஆனால், தேர்ட் மேனால் தடுக்கப்பட்டது.
ஐந்தாவது பந்து: இந்த முறை எல்லீஸ் பெர்ரி மற்றொரு பந்து வீச்சாளரான சுதர்லேண்ட்டிடம் பந்துவீச தருகிறார். சுதர்லேண்ட் வீசிய ஓவர் பிட்ச் பந்தை டெண்டுல்கர் கவர் ஃபீல்டர் பக்கம் அடிக்கிறார்.
ஆறாவது பந்து: சுதர்லேண்ட் ஆறாவது பந்து வீச டெண்டுல்கர் மிட் ஆன் மில்டரை நோக்கி அடிக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் விளையாடிய இந்த ஒரு ஓவரை கிரிக்கெட் ரசிகர்களும் நெட்டிசன்களும் திரும்பத் திரும்பப் பார்த்து அனைவரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.