Sachin Tendulkar | Mumbai: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏராளமான சாதனை படைத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் தனி மதம் என்றால், அதன் கடவுள் சச்சின் என்று கூறும் அளவுக்கு அவரின் உச்சநட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மேற்கு மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் வீட்டில் இரவு 9 மணிக்கு மேலும் கட்டிட வேலை நடைபெறுவதாகவும், அதனால் எழும் பலத்த சத்தம் அருகாமையில் குடியிருப்போர்களுக்கு பெரும் தொந்தரவாக இருப்பதாகவும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் எக்ஸ் தளத்தில் சச்சினை டேக் செய்து புகார் தெரிவித்தார்.
திலீப் டிசோசா எனும் சச்சினின் பக்கத்து வீட்டுக்காரர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அன்புள்ள சச்சின், தற்போது இரவு 9 மணி ஆகிவிட்டது, உங்கள் பாந்த்ரா வீட்டிற்கு வெளியே நாள் முழுவதும் பலத்த சத்தம் எழுப்பும் சிமென்ட் கலவை இயந்திரம் இன்னும் அங்கேயே உள்ளது. இப்போதுவரை பெரிய சத்தம் எழுப்புகிறது. தயவு செய்து உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களை நியாயமான நேரத்தை கடைபிடிக்கும்படி கேட்க முடியுமா? மிக்க நன்றி." என்று பதிவிட்டு சச்சினிடம் புகார் தெரிவித்தார்.
Dear @sachin_rt, it's nearly 9pm and the cement mixer that's been outside your Bandra home all day making a loud noise is still there, still making a loud noise.
— Dilip D'Souza (@DeathEndsFun) May 5, 2024
Please could you ask the people working on your home to stick to reasonable hours? Thank you so much.
இந்த பதிவை திலீப் டிசோசா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட நிலையில், சச்சின் டெண்டுல்கரின் அலுவலகத்திலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், சத்தத்தை குறைந்தபட்சமாக வைத்திருக்க அவர்கள் எடுத்த கட்டுப்பாடுகள் மற்றும் முயற்சிகள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் நேற்று திங்கள்கிழமை அவர் பதிவிட்டுள்ளார்.
திலீப் டிசோசா தனது பதிவில், "இதன் தொடர்ச்சியாக, இன்று மதியம் சச்சின் அலுவலகத்தில் ஒருவரிடமிருந்து எனக்கு மிகவும் அன்பான அழைப்பு வந்தது. அவர்களின் கட்டுப்பாடுகள் மற்றும் சத்தத்தை குறைந்தபட்சமாக வைத்திருக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை விளக்கினார். மேலும், நான் கூறியதை அவர் பொறுமையாக கேட்கவும் செய்தார். ஆனால், இங்குள்ள மற்ற சில கட்டிட வேலை செய்யும் நிறுவங்கள் அதற்கு செவிமடுப்பதில்லை." என்று பதிவிட்டுள்ளார்.
As a followup, I got a very gracious call this afternoon from someone at the office of @sachin_rt. He explained their constraints and the efforts they are making to keep noise to a minimum, and gave me a patient hearing.
— Dilip D'Souza (@DeathEndsFun) May 6, 2024
Far more than I can say about the other noisemakers here.
அவரது இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதற்கு பதிலளித்து சிலர், இந்த பிரச்சனையை சமூக ஊடகங்கத்தில் கொண்டு வந்ததற்காக அவரைப் பாராட்டியும் உள்ளனர். "ஆனால் நீங்கள் பல நாட்களாக அனுபவித்த மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்கு யார் ஈடு கொடுப்பார்கள். இது அமெரிக்காவாகவோ அல்லது இங்கிலாந்தாகவோ இருந்தால் நீங்கள் வழக்குத் தொடுத்து இழப்பீடு பெற்றிருக்கலாம்" என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.