இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றாலும், தனது கிரிக்கெட் அனுபவங்களை அடுத்த தலைமுறையினருடன் பகிர்ந்து கொண்டு ஊக்குவித்து வருகிறார். மேலும், திறமையான வீரர், வீராங்கனைகளை தானாகவே முன்வந்து பாராட்டியும் வருகிறார்.
அந்த வகையில், சிறப்பான பவுலிங் ஆக்சனுடன் பந்துவீசும் சிறுமியை சச்சின் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அந்த சிறுமி முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் போல் பவுலிங் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சச்சின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "ஸ்மூத், சிரமமில்லாமல் மற்றும் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. ஜாகீர் கான் சுசீலா மீனாவின் பந்துவீச்சு உங்களுக்கு சாயலில் இருக்கிறது. நீங்களும் பார்க்கிறீர்களா?" என்று பதிவிட்டு ஜாகீர் கானை டேக் செய்துள்ளார் சச்சின்.
சச்சினின் இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள ஜாகீர் கான், "நீங்கள் அதை கவனித்து இருக்கிறீர்கள். நான் அதை ஒப்புக்கொள்ளகிறேன். அவருடைய ஆக்சன் மிகவும் மென்மையானது மற்றும் ஈர்க்கக்கூடியது. அவர் நல்ல வீராங்கனை என்பதை வெளிக்காட்டுகிறார்." என்று கூறியுள்ளார்.
வெறுங்காலுடன் பவுலிங் போடும் சுசீலா, ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இவர் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது இயல்பான திறமையையும், கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் தனது தரமான பவுலிங் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். பந்தை டெலிவரி செய்வதற்கு முன் அவர் ஜம்ப் செய்து வருவது அச்சு அசல் ஜாகீர் கான் போலவே இருக்கிறது. சிறுமி குறித்து சச்சின் மற்றும் ஜாகீர் கான் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டது தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“