சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வீடியோ ஒன்று சமூக தளங்களில் அதிகம் பரவி வந்ததை நீங்கள் பார்த்திருக்க முடியும். அதைப் பார்த்தவர்கள் யாரும், சத்தியமாக பவுலர் ஆகிவிடக் கூடாது என்றே நினைத்திருப்பர்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஃபாஸ்ட் பவுலர் வீசிய பந்து, பேட்ஸ்மேனின் ஸ்டம்ப்பை ஹிட் செய்கிறது. பைல்சும் விழுவது போல் அசைந்து கொடுக்க, எல்லோரும் அவுட் என்று கொண்டாடும் தருவாயில், சாவகாசமாக சென்று ஆஃப் ஸ்டெம்ப்பின் மேல் ஜம்மென்று அமர்ந்து கொண்டது.
பைல்ஸ் கீழே விழுந்தால் தானே விக்கெட்... இல்லையெனில், அவுட் கிடையாது என்பதால், பேட்ஸ்மேன் தப்பிக்க, அந்த பவுலர் நான்கு நாட்களுக்கு ரூம் போட்டு கோபமாக இருந்ததாக தகவல்.
இந்நிலையில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து, "நண்பர் ஒருவர் எனக்கு இந்த வீடியோவை ஷேர் செய்தார். இப்படி நடப்பது அபூர்வம்!! நீங்கள் அம்பயராக இருந்திருந்தால், இதற்கு உங்கள் தீர்ப்பு என்ன?" என்று பதிவிட்டிருந்தார்.
சச்சினே கேள்விக் கேட்ட பிறகு ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன? தங்கள் பதிலை அள்ளித் தெளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பெரும்பாலான ரிப்ளையில் இலங்கை அம்பயர் குமார் தர்மசேனாவை கலாய்த்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள். உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில், ஓவர் த்ரோவுக்கு 4 ரன்கள் கூடுதலாக அளித்து, இங்கிலாந்து வெற்றிப் பெற முக்கிய காரணங்களில் ஒருவராக விளையாடியவர் குமார் தர்மசேனா. உலகக் கோப்பை முடிந்த பிறகான பேட்டி ஒன்றில், அந்த த்ரோவுக்கு நான் பவுண்டரி கொடுத்திருக்கக் கூடாது, தவறு செய்துவிட்டேன் என்று சொல்லி புலம்பி இருக்கிறார். இனி வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன அம்பயர் சார்!!