தெற்கு ஆசிய கால்பந்து போட்டியில் 4-0 என்கிற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றியை ருசித்தது.
India vs Pakistan, SAFF Championship 2023 Tamil News: தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளநிலையில், 'ஏ' பிரிவில் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.
Advertisment
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 16 வது நிமிடம் மற்றும் 74வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தினார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். தொடர்ந்து 81 வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாண்டா சிங் கோல் அடித்தார். பதில் கோல் அடிக்க முயன்ற பாகிஸ்தான் போராடியது. இறுதியில், ஆட்ட நேர முடிவில் 4-0 என்கிற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றியை ருசித்தது.
ரெட் கார்டு
Advertisment
Advertisements
இந்த நிலையில், இந்த போட்டியின் போது இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்-கிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. களநடுவார்கள் சர்ச்சைக்குரிய முடிவை வழங்கிய பிறகு, விரைவாக வீச முயன்ற பாகிஸ்தான் வீரர் ஒருவரின் கைகளில் இருந்து பந்தை தட்டிச் சென்றதற்காக அவருக்கு ரெட் கார்டை களநடுவர் வழங்கினார்.
இந்திய டிஃபண்டர் வீரரான ப்ரீதம் கோட்டல் மற்றும் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா இக்பால் ஆகியோர் பந்துக்காக போட்டியிட்டனர். யார் த்ரோ-இன் எடுக்க வேண்டும் என்பதில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் இக்பால் பந்தை எடுத்து விளையாடுவதைத் தொடர உடனடியாக அதை விடுவிக்க முயன்றார். பின்புறமாக இருந்த ஸ்டிமாக் இக்பாலை வேகமாக வீசியதைத் தடுக்க முயன்றார். இக்பாலின் கையிலிருந்து பந்தை தட்டிச் செல்ல முயன்றார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் எதிர்ப்பை நடுவருக்குத் தெரிவிக்கும் போது அவரைச் சூழ்ந்தனர். டச்லைன் நிலைமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையொருவர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய கேப்டன் சுனில் சேத்ரி இரு அணி வீரர்களுக்கு இடையிலான வாக்குவாதத்தை நிறுத்த போராடினார். சிறிது நேரத்தில் வீரர்கள் பிரிந்து சென்றனர். ஆனால் கள நடுவர் பயிற்சியாளர் ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டு காட்டினார். மேலும் பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஷெஹ்சாத் அன்வர் மற்றும் ரஹிஸ் நபி மற்றும் இந்திய டிஃபண்டர் சந்தேஷ் ஜிங்கானுக்கு யெல்லோ கார்டு வழங்கினார். ஸ்டிமாக் வெளியேறிய நிலையில், முன்னாள் இந்திய டிஃபண்டர் மகேஷ் கவ்லி டக்அவுட்டில் இந்திய அணிக்கு உதவினார்.