News about R Sai Kishore, TNPL: 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சசிதேவ் 45 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 133 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் 73 ரன்கள் மட்டும் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா 25 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் மிரட்டி எடுத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளையும், ஆர் அலெக்சாண்டர் 2 விக்கெட்டுகளையும், சோனு யாதவ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
சுழல் வித்தை காட்டிய சாய் கிஷோர்…
இந்த ஆட்டத்தில், தனது சிறப்பான சுழற் பந்துவீச்சு மூலம் மிரட்டி எடுத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதோடு அவர் வீசிய 4 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்களுடன் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அந்த 4 விக்கெட்டுகளையும் சாய்த்து அட்டகாசப்படுத்தி இருந்தார். அவரின் அசத்தலான பந்துவீச்சில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் டி.என்.பி.எல். வரலாற்றில் மிகக் குறைவாக ரன் விட்டுகொடுத்த பந்துவீச்சாளர் என்கிற பெருமையை சாய் கிஷோர் பெற்றுள்ளார்.
திருப்பூர் தமிழன்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 7-வது ஆட்டத்தில் ஆடி 5-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்துள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திருப்பூர் அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.
இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil