இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் சர்ரே அணிக்காக கடைசி 3 போட்டிகளில் விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Surrey sign Sai Sudharsan for County Championship Tamil News: ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரரான சாய் சுதர்சன் நடப்பு சீசனில் 51.71 சராசரியுடன் 362 ரன்கள் எடுத்தார். சி.எஸ்.கே அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் 96 ரன்களை குவித்து மிரட்டி இருந்தார். அவரை ஆட்டத்தை கண்டு பலரும் வியப்படைந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல் டி 20 கிரிக்கெட் தொடருக்கான லைகா கோவை கிங்ஸ் அணி அவரை 21.60 லட்சத்துக்கு வாங்கியது. அதன்மூலம் டி.என்.பி.எல்-ல் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரரானார்.
Advertisment
கவுண்டி அணியில் கால் பதித்த சாய் சுதர்சன்
இந்நிலையில், சாய் சுதர்சன் இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன்பாகவே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடரில் அறிமுகமாக உள்ளார். இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் சர்ரே அணிக்காக கடைசி 3 போட்டிகளில் விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சர்ரே அணியின் இயக்குநர் அலெக் ஸ்டீவர்ட் பேசுகையில், 'நான் மதிக்கும் இந்திய ஜாம்பவான் வீரர்கள் சிலர், சாய் சுதர்சனை பற்றி பெரியளவில் கூறினார்கள்.இதனால் கடைசி 3 போட்டிகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3ம் தேதி) சர்ரே அணி வார்விக்ஷையர் அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் சாய் சுதர்சன் களமாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேன் அப்பாட் மற்றும் டாம் லேதன் ஆகியோர் தேசிய அணிகளுக்கு திரும்பியுள்ளதால், ரோச் மற்றும் சாய் சுதர்சனை சர்ரே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிபிடத்தக்கது.
அஸ்வின் பரிந்துரையா?
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் புஜாரா, அஸ்வின், அர்ஷ்தீப் சிங், உனாத்கட் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளார்கள். அண்மையில் பிரித்வி ஷா கூட ராயல் லண்டன் ஒன் ரே கோப்பையில் விளையாடி ஃபார்மை மீட்டெடுத்தார். தற்போது தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து கவுண்டி அணிகளுடன் நிர்வாகிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் நல்ல நட்புடன் இருக்கிறார். அதேபோல் தமிழக வீரர் சாய் சுதர்சன் பற்றி அஸ்வின் தொடர்ந்து பல்வேறு மேடைகளிலும் பெருமையாக பேசி வருகிறார். இதனால் சாய் சுதர்சனின் இங்கிலாந்து கவுண்டி ஒப்பந்தத்திற்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil“