இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 35). இவர் பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.
இதனிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான கஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதரபாத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக சாய்னா அறிவித்துள்ளார். கணவர் கஷ்யப்பை பிரிவதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்து பிரிவதாக அறிவித்துள்ளார். கஷ்யப்பை பிரிவதற்கான காரணம் குறித்து சாய்னா எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சாய்னா தனது அறிவிப்பில், "வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. பல யோசனைகள் மற்றும் பரிசீலனைகளுக்குப் பிறகு, நானும் காஷ்யப் பருபள்ளியும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களுக்கும் ஒருவருக்கொருவரும் அமைதி, வளர்ச்சி மற்றும் குணப்படுத்துதலைத் தேர்வு செய்கிறோம்" என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். மேலும், "நினைவுகளுக்கு நான் நன்றி உள்ளவளாக இருக்கிறேன், மேலும் சிறந்த எதிர்காலத்தை மட்டுமே விரும்புகிறேன். இந்நேரத்தில் எங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் புரிந்து கொண்டு மதித்ததற்கு நன்றி" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சாய்னாவும் காஷ்யப்பும் தங்கள் ஆரம்ப நாட்களில் இருந்து புல்லேலா கோபிசந்த் அகாடமியில் இணைந்து பயிற்சி பெற்றவர்கள். சாய்னா இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தவர். அவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஆனார். மேலும், உலகத் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். காஷ்யப், 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, உலகத் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தவர்.
35 வயதான சாய்னா, கடந்த ஆண்டு இறுதியிலேயே ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்தார். 2023 ஜூன் மாதம் சிங்கப்பூர் ஓபனில் முதல் சுற்றில் வெளியேறியதில் இருந்து எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. 'ஹவுஸ் ஆஃப் குளோரி' போட்காஸ்டில், கீல்வாதம் (arthritis) தொடர்பான தனது உடல்நலப் போராட்டங்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உடல்நிலையைப் பொறுத்து ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.