இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்யுத்த வீரர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்தனர். இதனையடுத்து, ஜூன் 15 வரை தங்களது போராட்டத்தை இடைநிறுத்த ஒப்புக்கொண்டனர். இந்த தேதியில் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என்றும் அமைச்சர் தாக்கூர் உறுதியளித்து இருந்தார்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் டெல்லி போலீசார் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
மேலும், ஒரு மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்ய பரிந்துரை செய்யும் அறிக்கையையும் போலீசார் சமர்ப்பித்தனர். மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று புதிய அறிக்கையை பதிவு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாக்ஷி மாலிக் கேள்வி
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை கைவிட டெல்லி காவல்துறை நீதிமன்ற அனுமதி கோரியதை அடுத்து, மைனர் மல்யுத்த வீராங்கனை மற்றும் அவரது தந்தையின் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றதைக் காரணம் காட்டி, பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்த 2016 ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் புகாரை போலீசார் கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சாக்ஷி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “போக்ஸோ வழக்கில், மைனர் மல்யுத்த வீராங்கனையின் வாக்குமூலம் (முதலில்) மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டபோது பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட்டிருந்தால், அந்த வீராங்கனை புகாரை வாபஸ் பெற்றிருக்க மாட்டார். அது மட்டுமல்ல. மற்ற பெண்களும் முன் வந்து (பாலியல் துன்புறுத்தல் பற்றி) புகார் செய்திருப்பார்கள். அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தன என்று நான் கேள்விப்பட்டேன். (அறிக்கையுடன்) என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில், பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி போலீஸார் நேற்று வியாழக்கிழமை மனு தாக்கல் செய்து இருந்தனர்.
"போக்சோ விவகாரத்தில், விசாரணையை முடித்த பிறகு, நாங்கள் பிரிவு 173 CrPC இன் கீழ் போலீஸ் அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம். புகார்தாரரின் அறிக்கைகளின் அடிப்படையில், அதாவது பாதிக்கப்பட்டவரின் தந்தை மற்றும் பாதிக்கப்பட்டவரின் அறிக்கையின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்யக் கோருகிறோம்," என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு ஜூலை 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி 7 மல்யுத்த வீராங்கனைகளில் ஒரே மைனர் தனது குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. அதில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முன் மைனர் மல்யுத்த வீராங்கனை புதிய வாக்குமூலத்தைப் பதிவு செய்து இருந்தார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் பேசுகையில், “அதில் எனக்கு ஆச்சரியமில்லை. இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்படுவதில் கணக்கிடப்பட்ட தாமதம் புகார்தாரரை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த வகையான போராட்டங்கள் நீண்ட மற்றும் வேதனையானவை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் வெளியே வரும்போது, அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் தொழிலையும் பணயம் வைக்கிறார்கள்." என்று கூறினார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசிய சாக்ஷி மாலிக், போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், சட்ட நடவடிக்கையின் முடிவில் பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்பட்டால் மட்டுமே நீதி கிடைக்கும் என்றார்.
"நாங்கள் எங்கள் சட்டக் குழுவைக் கலந்தாலோசித்து குற்றப்பத்திரிகையின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்வோம். அதன்பிறகு, எதிர்கால நடவடிக்கை குறித்து இறுதி முடிவு எடுப்போம். வலுவான குற்றப்பத்திரிகை என்றும், பிரிஜ் பூஷன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் தொடரலாம் என்றும் எங்கள் வழக்கறிஞர் குழு கூறினால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட்டால் மட்டுமே, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்தப் பெண் வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கும்,” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.