/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-05T163729.491.jpg)
Wrestlers Bajrang Punia, Sakshi Malik and Vinesh Phogat during wrestlers protest march towards new Parliament building, in New Delhi, Sunday, May 28, 2023. (Express Photo by Amit Mehra)
sakshi malik wrestling Tamil News: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், சரண் சிங்குடன், பயிற்சியாளர்கள் சிலர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், 125 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 4 பேர் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து உள்ளனர். அவர்களில் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். ஒருவர் காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர். இதுதவிர, சர்வதேச நடுவர் மற்றும் மாநில அளவிலான பயிற்சியாளர் என மொத்தம் 4 பேர் சரண் சிங்குக்கு எதிராக சாட்சியங்களை உறுதி செய்தனர்.
இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடந்து வரும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகியதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ள மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், 'நீதிக்கான போராட்டம் தொடரும்' என்றும், போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்பேன் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை. பின்வாங்கவும் மாட்டோம். சத்தியாகிரகத்துடன், ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்." என்று பதிவிட்டுள்ளார்.
சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் இந்த அறிக்கைகள் போலியானவை என்று கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “இயக்கத்தை திரும்பப் பெறுவதாக வந்த செய்தி வெறும் வதந்தி. நமக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த செய்திகள் பரப்பப்படுகின்றன. நாங்கள் பின்வாங்கவும் இல்லை, இயக்கத்தை வாபஸ் பெறவும் இல்லை. மல்யுத்த வீராங்கனைகள் எப்.ஐ.ஆர் பதிவு செய்ததாக வெளியான செய்தியும் தவறானது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என்று புனியா ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.