Salem Spartans vs Lyca Kovai Kings, 19th Match Tamil News: 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், சேலத்தில் இரவு 7.15 மணிக்கு அரங்கேறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் - அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்
லைகா கோவை கிங்ஸ்: எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், யு முகிலேஷ், ஷாருக் கான் (கேப்டன்), எம் முகமது, அதீக் உர் ரஹ்மான், மணிமாறன் சித்தார்த், வள்ளியப்பன் யுதீஸ்வரன், ஜாதவேத் சுப்ரமணியன்
சேலம் ஸ்பார்டன்ஸ்: அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் சும்ரா, கௌசிக் காந்தி, மான் பாஃப்னா, எஸ் அபிஷிக், முகமது அட்னான் கான், சன்னி சந்து, அபிஷேக் தன்வார் (கேப்டன்), ராஜேந்திரன் கார்த்திகேயன், சச்சின் ரதி, எம் கணேஷ் மூர்த்தி
கோவை பேட்டிங்
கோவை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுரேஷ் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக சாய் சுதர்சன் மற்றும் சுஜய் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. சுஜய் 44 ரன்களிலும் சாய் சுதர்சன் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அதிக் ரஹ்மான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய முகிலேஷ் 5 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ராம் அரவிந்த் சிக்சர்களாக விளாசி ரன் குவித்தார். மறுமுனையில் ஆடிய ஷாரூக் கான் 11 ரன்களிலும், முகமது 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய ராம் அரவிந்த் 22 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். கடைசி பந்தில் சித்தார்த் 2 ரன்களில் அவுட் ஆக கோவை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. சேலம் அணி பந்துவீச்சில், சாந்து 3 விக்கெட்களையும் அபிஷேக், சச்சின், கௌசிக் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சேலம் பேட்டிங்
சேலம் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் அமித் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹரிஹரன் 7 ரன்களிலும் கௌசிக் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மான் பஃப்னா 10 ரன்களிலும் அபிஷேக் 15 ரன்களிலும் அவுட் ஆகினார். அடுத்து வந்த சாந்து மற்றும் ஆதன் கான் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இருப்பினும் சாந்து 29 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆதன் கான் மற்றும் ஆகாஷ் தலா 20 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய அபிஷேக் தன்வர் 4 ரன்களிலும் சச்சின் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க சேலம் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கார்த்திகேயன் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார். சேலம் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. கோவை தரப்பில் கௌதம் 3 விக்கெட்களையும், ஷாரூக் கான் 2 விக்கெட்களையும், சித்தார்த், யுதேஷ்வரன், சுப்ரமணியம், முகமது தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கோவை கிங்ஸ் அணி சேலத்தை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil