அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் தொடரை ஒட்டி, வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம் ரூ.467.95 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இதில், 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட து வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26¾ கோடி, பஞ்சாப்) ஆகியோர் ஐ.பி.எல். ஏல வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டனர்.
இந்நிலையில் 2-வது நாள் மெகா ஏலம் இன்று திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னள் கேப்டனான சாம் கரனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 2.40 கோடிக்கு வாங்கியது. சி.எஸ்.கே ரசிகர்களால் 'சுட்டிக்குழந்தை' என அன்போடு அழைக்கப்படும் சாம் கரன் தற்போது மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி இருக்கிறார். அவரது வருகை சென்னையின் வேகப்பந்து வீச்சுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
87% சரிந்த சம்பளம்
ரூ. 2.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் 87 சதவீத சம்பள சரிவைக் கண்டுள்ளார். சாம் கரன் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் அறிமுகமானார். அவரை பஞ்சாப் அணி ரூ. 7.20 கோடிக்கு வாங்கியது. அவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தாலும், அவரை அடுத்த ஆண்டில் பஞ்சாப் அணி தக்கவைத்தது.
2020 ஆம் ஆண்டில் அவரை சென்னை அணி ரூ. 5.5 கோடிக்கு வாங்கியது. அந்த அணிக்காக இரண்டு சீசன்கள் ஆடிய நிலையில், அவர் 2022 சீசனில் ஆடவில்லை, டி20 உலகக் கோப்பையில் ஆடுவதற்கான தயாரிப்பு பணிக்காக சென்று விட்டார். அந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடரில் சாம் தனது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையடுத்து, 2023 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் அவரை ரூ. 18.5 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி. சாம் கடந்த இரண்டு சீசன்களாக சரியாக ஆடவில்லை. கேப்டனாகவும் அவர் மெச்சும் படி செயல்படவில்லை. அவரை ஏலத்தில் வாங்குவதில் இருந்து கைவிட்டது பஞ்சாப். அந்த அணியிடம் ரைட் டு மேட்ச் (ஆர்.டி.எம்) கார்டு இருந்தும், அவருக்காக அதனைப் பயன்படுத்தவில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“