தீவிரவாத தாக்குதலை நான் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதிவிட்ட ட்வீட் சமூக வலைத்தளங்களை பரபரப்பாக்கியுள்ளது.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த பிப்.14ம் தேதி மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் மனைவியும், இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று சிலர் சமூக தளங்களில் விவாதித்து வந்தனர்.
இந்நிலையில், சானியா மிர்சா தனது ட்விட்டரில் அளித்த விளக்கத்தில், “பிரபலங்கள் என்றாலே தங்கள் தேசப்பற்றை காட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தாக்குதலைக் கண்டித்து பதிவு செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கே இந்தப் பதிவு. உங்களுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால், எங்களை போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் நான் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. மொட்டை மாடியில் வந்து நின்று கத்த வேண்டிய அவசியமும் இல்லை ” என்று கூறியிருந்தார்.
We stand united ???? #PulwamaAttack pic.twitter.com/Cmeij5X1On
— Sania Mirza (@MirzaSania) 17 February 2019
மேலும், "நான் என் நாட்டிற்காக விளையாடுகிறேன். என் நாட்டிற்காக வியர்வை சிந்துகிறேன். அவ்வளவு தான் எனது பற்றை காட்ட முடியும். தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். தற்போது அமைதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று நீண்ட விளத்தை சானியா மிர்சா அளித்திருந்தார்.
ஆனால், அவர் கருத்து சொல்வதற்கு முன் நிலவிய சூழலை விட, அவர் விளக்கம் அளித்த பிறகே சர்ச்சைகள் பல கிளம்பியிருக்கின்றன. சிலர், 'பிரபலம் எனில் அப்படித்தான்... எதுக்குமே ரியாக்ட் செய்யாமல் உட்கார்ந்து இருந்தால், கேள்வி கேட்கத் தான் செய்வார்கள்' என்று தொனியில் விமர்சிக்க, சிலர், 'உங்கள் ட்வீட்டில் தப்பித்தவறி கூட பாகிஸ்தான் என்ற பெயரை கூட உபயோகிக்கவில்லையே என்று விமர்சித்து வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு, அதாவது சானியாவின் திருமணம் நடைபெற்ற புதிதில், அவர் பாகிஸ்தானுக்காக டென்னிஸ் ஆட வேண்டும் என அந்நாட்டு ரசிகர்கள் சிலர் வலியுறுத்தினார். ஆனால், நான் எப்போதும் இந்தியாவுக்காகவே விளையாடுவேன் என சானியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.