/indian-express-tamil/media/media_files/2025/04/28/XWeffG0L5fOHR9v4l4ET.jpg)
தங்களது மகன் ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் தங்களுக்கு துளியும் விருப்பமில்லை என்று தனது மகன் அங்கத் பும்ராவை கேலி செய்து ட்ரோல் செய்தவர்களை பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இந்திய அணியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவர் இவர் இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 205 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா.
இதேபோல், 70 டி20 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா இந்திய கிரிக்கெட் அணிக்காக 3 ஃபார்மெட்டுகளிலும் ஆடி வருகிறார். அவர் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் செயலாற்றி வருகிறார்.
ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆடி வரும் பும்ரா, அந்த அணிக்காக 139 போட்டிகளில் இருந்து 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, மற்றும் 2020 ஆகிய 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. அப்போது கேப்டனாக ரோகித் சர்மா இருந்த நிலையில், இந்த 5 பட்டங்களின் வெற்றியின் போதும் பும்ரா முக்கிய பங்காற்றினார். தாற்போது அவர் ஐ.பி.எல் 2025 சீசனில் ஆடி வருகிறார்.
இந்நிலையில், பும்ரா கடந்த 15 மார்ச் 2021 அன்று, கோவாவில் மாடலும், டி.வி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசனை காதலித்து மணந்தார். இந்த தம்பதிக்கு அங்கத் என்கிற மகன் இருக்கிறார். இந்த நிலையில், தங்களது மகன் ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் தங்களுக்கு துளியும் விருப்பமில்லை என்று தனது மகன் அங்கத் பும்ராவை கேலி செய்து ட்ரோல் செய்தவர்களை பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் கடுமையாக சாடியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை லக்னோ - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தை நேரில் காண பும்ராவின் மனைவி சஞ்சனா மற்றும் அவர்களது மகன் அங்கத் மைதானத்திற்கு வந்திருந்தனர். அப்போது பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தியதும் கேமரா சஞ்சனா மற்றும் அங்கத்தின் பக்கம் திரும்பியது. அதில் இருவரும் பும்ரா விக்கெட் கைப்பற்றியதை கைதட்டி கொண்டாடினர்.
ஆனால், மகன் அங்கத் சிரிக்காமல் அமைதியாக இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அங்கத் குறித்து பல விதமான கருத்துகளை தெரிவித்தனர். இந்த அவர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன்.
— 𝗬𝗼𝗴𝗿𝗮𝗷 𝗦𝗶𝗻𝗴𝗵 (@AlphaProMax1998) April 27, 2025
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர்.
மன அழுத்தம் போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களின் மகனை பற்றியும், வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது! இன்றைய உலகில் நேர்மையும் கொஞ்சம் நீண்ட தூரம் செல்கிறது" என்று பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் சாடியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.