அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துள்ளர்கள். மேலும், அவர்களின் தாயக வருகைக்காகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக இறுதிப் போட்டி நடந்த பார்படாஸ் மற்றும் கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிரும் ஓட்டலிலேயே இருந்து வருகிறார்கள்
இந்நிலையில், டி.வி தொகுப்பாளாரும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியுமான சஞ்சனா கணேசன், இந்திய கிரிக்கெட் அணி சொந்த நாடு திரும்புவது குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கடலின் ஆர்ப்பரிக்கும் அலையை சிறிய வீடியோவாக பகிர்ந்துள்ளார். மேலும் அவர் இன்னும் பெரிய அலைகள் எழுவதை எதிர்பார்ப்பதாகவும், அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன் மூலம், இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்படலாம் என மறைமுகமாக குறிப்பிடுவதாகத் தெரிகிறது.
பெரில் புயல்
பெரில் புயல் நேற்று திங்கள்கிழமை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சமீபத்திய தகவல்களின்படி தென்கிழக்கு கரீபியன் நோக்கி நகர்ந்து புயல் மேலும் தீவிரமடைந்தது. இதனால், இந்திய அணி வீரர்கள் தாயாகம் திரும்பவது மேலும் தாமதமாகும் என தெரிகிறது.
பெரில் புயலின் தீவிரம் குறித்து, வானிலை அறிவிப்பு மையத்தின் முன்னறிவிப்பாளர்கள் லாரி கெல்லி மற்றும் ஜான் காங்கியாலோசி ஆகியோர் இதை 'மிகவும் ஆபத்தான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை' என்று அழைக்கின்றனர். அக்யூ வெதர் இன்க் நிறுவனத்தின் முன்னணி புயல் முன்னறிவிப்பாளர், அலெக்ஸ் டாசில்வா, கடந்த காலங்களில் எங்கும் 4 வகை அறிக்கை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
தேசிய வானிலை சேவையால் வகைப்படுத்தப்பட்ட வகை 4 புயல் என்பது மணிக்கு 130 முதல் 156 மைல் வேகத்தில் வீசக்கூடியது. அதாவது, மணிக்கு 209 முதல் 251 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதனால் ஏற்படும் சேதங்கள் பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார்கள். பெரும்பாலான கூரை அமைப்பு மற்றும் வெளிப்புறச் சுவர்களை சாய்ப்பது மூலம் வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படலாம்.
பெரும்பாலான மரங்கள் முறிந்து அல்லது வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் சாய்ந்துவிடும் சூழல் இருக்கும். மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்ததால் குடியிருப்பு பகுதிகள் தனிமைப்படுத்தப்படும். இங்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்க வாரங்கள் முதல் மாதங்கள் வரை எடுக்கும். அப்படி ஏற்படும் சூழலில் அங்குள்ள பல பகுதிகள் சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை வாழத் தகுதியற்றதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.